‘எல்லோரும் நம்முடன்’ உறுப்பினர் சேர்க்கை: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கிலிருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “எல்லோரும் நம்முடன்” என்ற இந்த உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். கடைக்கோடி கிராமம் வரை இணையத்தின் பாய்ச்சல் நிகழ்ந்துவருகிறது. இவ்வேளையில், தி.மு.கவில் உறுப்பினராகச் சேர விரும்புவோரின் கனவை எளிமைப்படுத்தும் நோக்கில், இணையம் வழியாகவே திமுக உறுப்பினராவதற்கான வாய்ப்பை எல்லோருக்கும் இந்த முயற்சி வழங்குகிறது.

18 வயது நிறைவடைந்த எவரும் https://www.dmk.in/joindmk என்ற இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பதிந்து தி.மு.கவில் உறுப்பினராகச் சேரலாம்.  எனினும், இணையம்வழியாக உறுப்பினரானோர், உட்கட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற வேண்டுமெனில் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் உள்ளூர் கழகப் பிரதிநிதியால் நேரில் சரிபார்க்கப்படுவதுடன் கட்சி  விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு - இணையம் வழியாக சேரும் உறுப்பினர் ஓராண்டை நிறைவு செய்ய வேண்டும். அப்படியில்லை எனில், சம்பந்தப்பட்ட இணைய உறுப்பினர் 25 தகுதியான நபர்களைக் திமுகவில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

 தமிழர் உரிமைகளின் பாதுகாவலனாகவும் தமிழ்ப் பண்பாட்டின் தலைமைப் பிரதிநிதியாகவும் திகழ்ந்துவரும் தி.மு.க., வளமான எதிர்காலத்தை நோக்கி, தமிழ்நாட்டைச் செலுத்தும் எண்ணத்துடன், தனது “எல்லோரும் நம்முடன்” என்ற இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து ஒன்றிணைக்க  முயல்கிறது. இந்தச் சீரிய முயற்சியில் வெற்றிபெற அனைவரும் அயராது பாடுபடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: