நாகர்கோவில்: மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக உயர்த்தப்படும். 70 வயது முதல் 75 வயது வரை உள்ள மீனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின், குளச்சல் தொகுதியில் மீண்டும் களம் காணும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ, பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி, விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.டி.பிரவீன், கிள்ளியூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பேசியதாவது:
நமது மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இதே நரேந்திர மோடி என்ன சொன்னார்? ‘மன்மோகன் சிங் என்ற பலவீனமான பிரதமர் ஆளுகிற காரணத்தால் தான் நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது; பலமான பிரதமராக நான் வந்தால் இது நடக்காது’ என்று பேசினார். இப்போது என்ன நடக்கிறது? தாக்குதல்கள் இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்போது தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மாண்புமிகு மோடி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா?
இந்தக் கேள்வியை மட்டுமில்லாமல், தமிழகத்தின் சார்பில் பிரதமரிடம் கேட்க இன்னும் ஏராளமான கேள்விகள் அடுக்கடுக்காக இருக்கின்றன:
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது?
* கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் எங்கே?
* ஓசூர் விமான நிலையம் மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஏன் தரவில்லை?
* பள்ளிக்கல்வி நிதி, கீழடி ஆய்வு அறிக்கை போன்றவை என்ன ஆனது?
* தொகுதி மறுவரையறையில் உரிய நியாயம் கிடைக்குமா?
* நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு மற்றும் தமிழகத்திற்கு மறுக்கப்படும் புதிய ரயில்வே திட்டங்கள்.
இப்படி தமிழகத்தின் சார்பில் மோடியிடம் கேட்க ஏராளமான கேள்விகள் நம்மிடம் உள்ளன. இதற்கெல்லாம் பதில் இருக்கிறதா என்றால் இல்லை!
இப்போது புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. சிறுபான்மையின மக்களை, குறிப்பாகக் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுதான் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்தம் (FCRA) மசோதா. இதற்காகவும் தமிழ்நாட்டில் இருந்து இந்த ஸ்டாலின் தான் முதல் குரல் கொடுத்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பே இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். இது குறித்து முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன். நேற்று மீண்டும் பிரதமருக்கு அரசின் சார்பில் விரிவாகக் கடிதமும் எழுதியிருக்கிறேன். இந்தச் சட்டத்திருத்தம் மதச் சுதந்திரம் மற்றும் சமூகச் சேவை செய்யும் மக்கள் மீதான ஒரு கடுமையான தாக்குதல்; இது அரசமைப்பு வழங்கிய உரிமைகளைப் பறிக்கும் செயல்.
கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் கேரளாவிலும், அசாம் மாநிலத்திலும் தேர்தல் வரவிருப்பதால் பாஜக அரசு இப்போது சற்றே பின்வாங்கியிருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இந்த மசோதாவைச் சட்டமாக்குவது தான் பாஜகவின் சதித்திட்டம். இந்நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
FCRA சட்டத்திருத்தத்தை பழனிசாமி ஆதரிக்கிறாரா? இல்லையென்றால் குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் போன்றவற்றின் மூலம் இஸ்லாமியர்களுக்குத் துரோகம் செய்தது போலவே, இப்போது கிறிஸ்துவ மக்களுக்கும் துரோகம் செய்யத் தயாராகிவிட்டாரா?
அதிமுக என்ற கட்சியே இப்போது பாஜகவின் அடிமைக்கூட்டமாக மாறிப்போயிருக்கிறது. தன்னுடைய சுயநலத்துக்காகவும், பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் பழனிசாமி அதிமுகவை இப்படி ஒரு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியைத் தக்கவைக்க அவர் டெல்லிக்குக் காவடி தூக்குகிறார்.
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நமது திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: கடந்த 5 ஆண்டுகளில் 121 மீனவ உட்கட்டமைப்பு பணிகள், 46 புதிய மீன் இறங்கு தளங்கள், மற்றும் 29 மீன் இறங்கு தள மேம்பாட்டுப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மானிய விலையில் டீசல் உயர்வு, மீனவ மகளிருக்கு மானியங்கள் எனப் பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு UPSC தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
2004 சுனாமி காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு, நமது ஆட்சியில் தான் உரிமைதாரர் பெயரிலேயே கணினிப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை 5,000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தினோம்.
மீன்பிடி குறைவு காலமான ஜனவரி முதல் மார்ச் வரை வழங்கப்படும் நிவாரணத் தொகையை 6,000 ரூபாயாக உயர்த்தினோம்.
இப்போது நமது தேர்தல் அறிக்கையில் உங்களுக்காக சில அதிரடி வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். இனி மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரணத் தொகை மாதம் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை மாதம் 9,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக உயர்த்தப்படும். 70 வயது முதல் 75 வயது வரை உள்ள மீனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.
திராவிட மாடல் அரசு எப்போதும் மீனவர்களின் உண்மையான நண்பனாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், வெளியுறவுக் கொள்கையைத் தன் கையில் வைத்துள்ள ஒன்றிய பாஜக அரசு, எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. சிறிய அண்டை நாடுகளிடம் கூட இந்தியா தன் செல்வாக்கை இழக்கும் நிலையை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். தமிழ்நாடு மீனவர்களை இந்திய மீனவர்களாகக் கருதி பாஜக அரசு அக்கறை காட்டாதது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
