நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலப்புழாவில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சமீப காலம் வரை இடதுசாரிகளுக்கு என்று ஒரு தனித்துவம் இருந்தது. ஆனால் கேரளாவில் உள்ள இடதுசாரிகளுக்கு அந்த தனித்துவம் இப்போது இல்லை. மதவாதத்தின் கண்ணுக்கு தெரியாத கரங்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னோக்கி செலுத்துகின்றன. இது நம் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கும், வெறுப்புணர்ச்சியை பரப்புவதற்கும் தான் வழிவகுக்கும்.
இந்தத் தேர்தலுடன் கேரளாவில் இடதுசாரிகள் காணாமல் போய்விடுவார்கள். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜ-ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் இடையே ஒரு மோசமான உறவு இருக்கிறது. கேரள மக்களால் இதை நன்றாகவே புரிந்துகொள்ள முடியும். சமீபகாலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவராக இருந்து வந்த ஜி. சுதாகரன் தற்போது நம்முடன் இணைந்துள்ளார். அவர் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எடுத்ததால் காங்கிரஸ் மேடைக்கு வரவில்லை. மாறாக இடதுசாரி கூட்டணியில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களின் காரணமாகவே நம் பக்கம் அவர் வந்துள்ளார்.
தன்னிடம் இருந்துதான் அதிகாரம் வருகிறது என்று ஒரு தலைவர் நினைக்கத் தொடங்கினால் அவரிடம் கண்டிப்பாக ஆணவம் தலைதூக்கும். இதனால் மக்களுக்கும், அவருக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படும். கேரள முதல்வருக்கும், நம் நாட்டின் பிரதமருக்கும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மூன்று அல்லது நான்கு பேர் பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்தபோது அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இது அவருடைய அதிகார போதையைத் தான் காட்டுகிறது. மக்களுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு முறிந்துவிட்டது என்பதைக் காட்டும் அடையாளமாகத் தான் தேர்தல் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
* பெஸ்ட் புதுச்சேரியை கொடுக்க டிரை பண்றோம்… பிரதமர் மோடி மெசேஜ்
புதுச்சேரியில் 16வது சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகிற 9ம்தேதி நடக்கிறது. இதில் தேஜ கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் ரோடுஷோ மூலம் பிரசாரம் செய்தார். இதில் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். மோடியின் பழைய நினைவுகளை கன்முன் நிறுத்தும் தற்காலிக மோடி டீ ஸ்டாலும் அமைக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி ரோடுஷோ தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘புதுச்சேரியில் நடைபெற்ற ரோடுஷோ மிகச் சிறப்பாக அமைந்தது.
இதன்மூலம் பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கும் எங்கள் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். சமீபத்தில் நான் புதுச்சேரி வந்தபோது முக்கியமான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. நாங்கள் புதுச்சேரியில சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம். புதுச்சேரியின் பொருளாதாரம் வளர்வது மிக முக்கியம். அரசின் திட்டப் பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவடைவதை இந்த இரட்டை என்ஜின் அரசு உறுதி செய்யும்.
எதிர்க்கட்சிகளுக்கு புதுச்சேரியின் முன்னேற்றம் குறித்து எநத தொலைநோக்கு பார்வையும் இல்லை. அவர்கள் மக்களின் விருபத்திற்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக புதுச்சேரியை ஒரு ஏடிஎம் போல பயன்படுத்தி டெல்லியில் உள்ள உயர் தலைமை ஆட்சியின்கீழ் அது இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறார்கள். ஆனால் இதுவெறும் பேரணி அல்ல… இது ஒரு அறிவிப்பு. பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க நாங்கள் முழுவேகத்துடன் முன்னேறி வருகிறோம். வழியை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பின்னுக்கு ஓட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* சமூக ஊடகங்களில் தேர்தல் பதிவு: மிரட்டும் அசாம் காவல்துறை
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் சமூக ஊடகங்களிலும் அனல் பறக்கிறது. இதை கட்டுப்படுத்த அசாம் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக சமூக ஊடக பதிவு மீது புகார்கள் பெறப்பட்ட அல்லது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பந்தப்பட்ட உள்ளடக்கத்தை 100 சதவீதம் நீக்குவதை அசாம் போலீசார் உறுதி செய்து வருகிறார்கள்.
இதை அசாம் சிஐடி பிரிவின் சிறப்புக் காவல்துறைத் தலைவர் முன்னா பிரசாத் குப்தா உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தேர்தல்களை மையமாகக் கொண்டு, போலிச் செய்திகள், அவதூறுப் பதிவுகள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் போன்றவற்றைச் சமாளிப்பதற்காகவே சிஐடியின் கீழ் இந்தச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மார்ச் 20ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ள இந்தப் பிரிவு, பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் உள்ள 27 சுயவிவரங்கள் மற்றும் கணக்குகள் தொடர்பான 17 பிரச்னைகளில் நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 29 ல் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அதன் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் உள்ளனவா என்பதை எங்கள் காவலர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் போலிச் செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியானால், அதைக் கையாள்வதற்குப் பிற அதிகார அமைப்புகள் உள்ளன. சமூக ஊடகங்களே எங்கள் கண்காணிப்பு வரம்பிற்குள் வருகின்றன; எனவே, சமூக ஊடகங்களில் அத்தகைய செய்திகள் பகிரப்பட்டால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தல் தொடர்பான உள்ளடக்கங்களை நீக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு, சமூக ஊடகத் தளங்கள் மிக விரைவாகப் பதிலளித்து வருகிறது. இது, சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தளங்கள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்கிறது, மேலும் இணங்காத பட்சத்தில் அவற்றின் பாதுகாப்பான புகலிடப் பாதுகாப்பை நீக்குகிறது’ என்றார்.
* மேற்குவங்கத்தில் 7 நீதிபதிகள் சிறைபிடிப்பு: அநீதியே சட்டமாகும்போது எதிர்ப்பே ஒரே வழி; மார்க்சிஸ்ட் ஆவேசம்
மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 60 லட்சம் வாக்காளர்கள் பெண்டிங்கில் வைக்கப்பட்டனர். இதை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் ஆய்வு செய்து பட்டியவை இறுதி செய்து வருகிறார்கள். அப்படி மால்டா மாவட்டத்தில் நீதிபதிகள் பணியில் ஈடுபட்ட போது 3 பெண் நீதிபதிகள் உள்பட 7 நீதிபதிகள் 9 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இத மூத்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் முகமது சலீம் ஆதரித்துப் பேசினார்.
அவர் கூறுகையில்,‘ மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதிலும், பிழையற்ற வாக்காளர் பட்டியலை வெளியிடுவதிலும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அடைந்த படுதோல்வியின் தவிர்க்க முடியாத விளைவுதான் இந்த சிறைபிடிப்பு சம்பவம். மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமைகள் பறிக்கப்படும்போது, இத்தகைய போராட்டங்கள் நிகழ்வது இயல்பானதே. தேர்தல் ஆணையம் வரையிலும் உள்ள நிர்வாக அமைப்புகள் நீதி வழங்கத் தவறும் பட்சத்தில், நிர்வாகத்தின் தன்மை ஒரு காவல்துறை அரசாக மாறிவிடுகிறது. அப்போது அவர்கள் ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி, கடுமையான மற்றும் அடக்குமுறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்குகிறார்கள்.
அநீதி சட்டமாகும்போது, எதிர்ப்பது மட்டுமே ஒரே வழி. உலகம் முழுவதும், மக்கள் நிர்வாகங்களின் இத்தகைய ஜனநாயக விரோத, அரசியலமைப்புக்கு எதிரான, பகுத்தறிவற்ற செயல்களை எதிர்த்துள்ளனர். மக்கள் அதிகாரத்தை மீறுவதன் மூலம் எந்த நிர்வாகமும் நீடிக்க முடியாது. மேற்குவங்கத்தில் நடைபெறும் சர்ச்சைக்குரிய எஸ்ஐஆர் நடவடிக்கை, விளிம்புநிலை, ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் பிரிவினருக்கு எதிரான ஒரு போரைப் போன்றது. இது மத்துவாக்கள், அகதிகள், முஸ்லிம்கள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் திருநங்கை சமூகத்திற்கு எதிரான ஒரு போர்’ என்றார்.
