இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் சொத்துகளை பறிக்கும் மோடி அரசின் எப்சிஆர்ஏ சட்டம் மனித குலத்திற்கே எதிரானது: நாடாளுமன்றத்தில் திமுக கடுமையாக எதிர்க்கும்: வில்சன் எம்பி பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் வில்சன் எம்.பி. நேற்று அளித்த பேட்டி: ஏற்கனவே இஸ்லாமிய நண்பர்களுக்கு வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அவர்களின் சொத்துகளை அடித்துப் பிடுங்கிய பாஜ, இப்பொழுது கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அடித்து பிடுங்குவதற்கு எப்சிஆர்ஏ என்ற கொடூரமான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரு பள்ளியையோ, கல்லூரியையோ, மருத்துவமனையையோ அல்லது ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களையோ நடத்துவதில் என்ன தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கப் போகிறது? இந்த கொடூரமான சட்டத்தை எதிர்த்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த நிமிஷமே ஆதரவற்றோர் இல்லங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமாகிவிடும். 2020ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் 20,000க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன; ஒரே நேரத்தில் 2,500 கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து வழக்கு போட்டாலும் அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காமல் தடுத்தார்கள். இப்பொழுது இந்தச் சட்டத்தின் மூலம் உரிமம் இல்லாத நிறுவனங்களின் சொத்துகள் அடுத்த நொடியே ஒன்றிய அரசுக்குச் சென்றுவிடும்.

இது நாளைக்கு கிறிஸ்துவர்களின் தனிப்பட்ட சொத்துகளையும் எடுக்கும் அளவிற்குச் செல்லும் என்பதையே காட்டுகிறது. இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் சொத்துக்களைப் பறிப்பதன் மூலம் நாட்டில் பிரிவினைவாதத்தை உண்டாக்கி, மற்றவர்களின் சொத்துகளைக் கொள்ளையடிப்பதே இவர்களின் எண்ணம். அரசு செய்ய முடியாத மக்கள் நலப் பணிகளை 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வரும் இந்த நிறுவனங்களில் இவர்கள் என்ன தீவிரவாதத்தைப் பார்த்துவிட்டார்கள்? இந்த மசோதாவின்படி, பறிக்கப்படும் சொத்துகளை ஏலம் விடலாம் என்றும், அப்படி ஏலம் விடப்பட்டால் அந்தச் சொத்தைப் பற்றி நீங்கள் எதுவுமே கேட்க முடியாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு எடுக்கப்படும் சொத்துக்கள் இந்தியாவிலுள்ள இரண்டு மூன்று பணக்காரர்களிடமே போய்ச் சேருகின்றன.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது இது விவாதத்திற்கு வரவில்லை என்றாலும், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் கொண்டு வரப்படலாம். குறிப்பாகக் கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலத்தைக் கடைப்பிடித்து வரும் இந்த நேரத்தில், ஈஸ்டர் மற்றும் புனித வெள்ளிக்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய மசோதாவைக் கொண்டு வந்து மக்களைப் பயமுறுத்துவது தேவையற்ற செயலாகும். திமுக இதனை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கும்.

இது ஒருபுறமிருக்க, ‘ஜன் விசுவாஸ்’ என்ற மற்றொரு திருத்தச் சட்டத்தின் மூலம் 80 ஒன்றிய அரசு சட்டங்கள் திருத்தப்பட்டு, 717 குற்றங்களுக்கான தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன. முன்பு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றங்களுக்கு இப்போது வெறும் அபராதம் (Penalty) கட்டினால் போதும் என்று மாற்றியுள்ளனர். இந்தச் சட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே உருவாக்கப்பட்டுள்ளன; குற்றவாளிகள் பணத்தைக் கட்டிவிட்டு ”ஒயிட் காலர்” மனிதர்களாக உலவ இது வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: