சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரகளை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது: நாம் எவ்வளவு கண்ணியத்தோடு நடந்து கொள்கிறோம். அதை விட்டுவிட்டு குடும்பத்தை இழுத்து கண்ணியக்குறைவாக பேசினால், தமிழகம் முழுவதும் அடித்து விரட்டுவார்கள். இதில் மாற்றுக் கருத்து கிடையாது. உங்களைப் பற்றி நாங்கள் பேசியது கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களைப் பற்றி எப்படி பேசுகிறீர்கள்? எங்கள் கட்சியையோ, கூட்டணியில் இருக்கும் திமுகவையோ, கலைஞரின் குடும்பத்தையோ, எங்கள் வேட்பாளரையோ தரக்குறைவாக பேசினால், மக்களே உங்களை அடித்து விரட்டுவார்கள்.
லஞ்ச வழக்குகள், ஊழல் வழக்குகள் வைத்துக்கொண்டு டெல்லிக்கு போய் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறாய். எங்கள் கட்சியை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை, எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணிக்கு இன்றைக்கு சேத்துப்பட்டில் இருந்து என்னுடைய இறுதி எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். அதே மாதிரி தான் எடப்பாடியாரும் ஓவராக பேசிக் கொண்டிருக்கிறார். இன்று ஜாதி கட்சியை வைத்துக்கொண்டு நீங்கள் தேவையில்லாமல் ஜாதி மற்றும் குடும்பத்தை பற்றி பேசினால், அப்புறம் நாங்கள் பேச ஆரம்பித்தால் உன் முகம் எங்கே வைப்பாய் என்று தெரியாது. அதனால் அதோடு அன்புமணி நீங்களும் நிறுத்திக்கொள்ளுங்கள், எடப்பாடியார் நீங்களும் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று நான் மிகவும் மரியாதையாக சொல்கிறேன். நாங்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் ஓட வேண்டியது தான். இவ்வாறு அவர் பேசினார்.
