கிறிஸ்தவர்களை பாதிக்கும் எப்சிஆர்ஏ மசோதாவை சட்டமாக்க பாஜ சதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரை கூட்டி எப்சிஆர்ஏ மசோதாவை சட்டமாக்க பாஜ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக நாகர்கோவில் பொதுக்கூட்டதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று குமரி மாவட்டத்தில் , நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதில், கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர். செல்லசுவாமி, காங்கிரஸ் வேட்பாளர்கள் தாரகை கத்பர்ட் (குளச்சல்) டி.டி.பிரவீன் (விளவங்கோடு), எஸ்.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசியதாவது: இப்போ புதுசா ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கு. என்ன தெரியுமா? சிறுபான்மையின மக்களைக் குறிப்பா கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவச்சு அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கு. என்னன்னா, வெளிநாட்டு நிதிப் பங்களிப்புச் சட்டத் திருத்தம், அதாவது வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதா (எப்சிஆர்ஏ). இதுக்காகவும் தமிழ்நாட்டுல இந்த ஸ்டாலின்தான் முதல் குரல் கொடுத்திருக்கிறேன்.

ரெண்டு நாள் முன்னையே இதைக் கண்டிச்சு நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முழுமையா திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். நேற்று மீண்டும் பிரதமருக்கு அரசின் சார்பில் விளக்கமாக நான் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்தச் சட்டத் திருத்தத்தால இந்தியா முழுக்க கிறிஸ்தவச் சமுதாய மக்கள் கொதிச்சுப் போயிருக்காங்க. சான்றுகளைச் சமர்ப்பிப்பதில் சிறிய தாமதம் உள்ளிட்ட பிற காரணங்களைச் சுட்டிக்காட்டி ஒரு அமைப்போட அங்கீகாரத்தை ரத்து பண்ணி, அவங்ககிட்ட இருக்கக்கூடிய நிதியையும் சொத்தையும் பறிச்சுக்க இந்த கொடுங்கோல் சட்டம் வடிவமைக்கப்படுது.

சொத்துன்னா மக்களுக்குச் சேவையாற்றுகிற மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள் இவைதான். இன்னும் கொடுமை என்னன்னா, பாதி நிதியை வெளிநாட்டிலிருந்து பெற்று மீதியை உள்நாட்டிலிருந்து பெற்று உருவாக்கின சொத்துக்களைக் கூட இந்தச் சட்டம் வந்தா அதை முடக்கிட முடியும். பிரதமர் மோடி கண் துடைப்புக்காக சில கிறிஸ்தவப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டு, ஏழைகள் கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் அவங்க செய்யற செயல்களை எல்லாம் பாராட்டிப் பேசறார். ஆனா இப்போ என்ன செய்யறார்? இதுதான் அவருடைய உண்மையான முகம்.

திடீர்னு இப்படித் தன்னிச்சையான கொடுங்கோல் சட்டத்தைக் கொண்டு வந்தா, குறிப்பா பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், கிராமப்புற ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவாங்க. நிதி தரக்கூடிய, நிதி தருவதற்கு முன்வருபவர்களை அச்சுறுத்துகிற மாதிரியும் பிரிவுகள் இந்தச் சட்டத் திருத்தத்துல கொண்டு வந்திருக்காங்க. இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான கிறிஸ்தவக் கல்வி, மருத்துவ அமைப்புகள் இயங்கி வருது. அதெல்லாம் இல்லாமப் போனா, அரசால அவங்க பண்ணிட்டு வர்ற சேவையை நிரப்ப முடியாது என்பதையும் என்னுடைய கடிதத்துல அதை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மொத்தத்துல இந்தச் சட்டத் திருத்தம் மத சுதந்திரம் மற்றும் சமூகச் சேவை விரும்புகிற மக்கள் மீதான கடுமையான தாக்குதல்.

அரசியலமைப்பு வழங்கக்கூடிய உரிமைகளைப் பறிக்கக்கூடிய செயல். கிறிஸ்தவ மக்கள் அதிகமா வாழ்கிற, தேவாலயங்கள் அதிகமா இருக்கக்கூடிய கேரளா, அஸ்ஸாம் மாநிலங்கள்ல தேர்தல் நடக்க இருக்கக்கூடிய காரணத்தால இப்போதைக்கு பயந்து போய் பாஜ கொஞ்சம் பின்வாங்கியிருக்கு. ஆனா கூடிய விரைவில் சிறப்புக்கூட்டத்தொடர், நாடாளுமன்றத்தினுடைய சிறப்புக்கூட்டத்தொடரைக் கூட்டி இந்த மசோதாவை நிறைவேற்ற, சட்டமாக்குவதுதான் பாஜவோட சதித் திட்டம். கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களால இந்துக்களும்தான் அதிகப் பயனடையறாங்க. மதவெறிப் பார்வையோடு மனிதநேயச் செயல்பாடுகள் மேல தொடுக்கக்கூடிய இந்தத் தாக்குதல் ஒரு மதத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே எதிரானது.

நாடாளுமன்றமே முடங்கக்கூடிய அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை எதிர்த்துப் பேசியிருக்காங்க. இதுல அதிமுக-வோட நிலைப்பாடு என்னனு மக்கள் தெரிஞ்சுக்க வேண்டாமா? சொல்லுங்க பழனிசாமி அவர்களே… இந்த எப்சிஆர்ஒ சட்டத் திருத்தத்தை பழனிசாமி நீங்க ஆதரிக்கிறீங்களா? இல்ல குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு சட்டத் திருத்தத்துல இஸ்லாமியர்களுக்குத் துரோகம் பண்ண மாதிரியே, அடுத்து கிறிஸ்தவ மக்களுக்குத் துரோகம் பண்ணத் தயாராகிட்டீங்களா? நேற்று ஒரு கூட்டத்துல பழனிசாமி பேசியிருக்கிறார். சிறுபான்மை மக்களைக் கண்ணை இமை காப்பது போல் அதிமுக காக்கும் எனச் சொல்கிறார்.

இப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க? அதிமுக என்ற கட்சி பாஜவினுடைய கொத்தடிமைக் கூட்டமா மாறிப் போயிருக்கு. தன்னுடைய சுயநலத்துக்காக, தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இப்படி ஒரு நிலைமையில அதிமுக-வைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் பழனிசாமி. இன்னும் ஷார்ப்பாக சொல்லணும்னா, அதிமுக பொதுச்செயலாளர் என்ற நேம் போர்டை காப்பாத்திக்க அவர் டெல்லிக்குக் காவடி தூக்குகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

* மீனவ கிராமத்தில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் இருந்து கார் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வந்தார். தனியார் விடுதியில் தங்கியவர், நேற்று (4ம்தேதி) காலை 7 மணியளவில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இருந்து நடைபயிற்சி தொடங்கியவர், அருகில் உள்ள கோவளம் மீனவ கிராமத்துக்குள் திடீரென சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

திடீரென முதல்வர் தங்கள் பகுதிக்கு வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள், பெண்கள் வீடுகளில் இருந்து வெளியே ஆர்வத்துடன் ஓடி வந்து அவருக்கு கை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோரிக்கைகளையும் கூறினர். மக்கள் தெரிவித்த கோரிக்கைகளையும் கேட்டுக் கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘திமுக அரசு மீனவர்கள் மீது அக்கரையுடன் செயல்பட்டு வருகிறது. மீனவர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது. மீனவர்களுக்கு தொடர்ந்து பணியாற்ற திமுகவுக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். கன்னியாகுமரி தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் மகேஷ் போட்டியிடுகிறார்.

அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை தாருங்கள். மீனவர்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்’’ என்றார். கன்னியாகுமரியில் உள்ள சூரிய அஸ்தமன பகுதியில் இருந்து கோவளம் தூண்டில் வளைவு வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி சென்றார். தூண்டில் வளைவு பகுதியில் மீனவர்கள் கடலில் பிடித்து வந்த மீன்களை வலையிலிருந்து பிரித்துக் கொண்டிருந்தனர். மேலும் ஒரு படகில் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராக இருந்தனர். அவர்களையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

* நன்றி தெரிவித்த பெண்கள்
நடை பயிற்சி வாக்கு சேகரிப்பின் போது முதலமைச்சரை சந்தித்த பெண்கள் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கும், மகளிர் விடியல் பயணத்திற்கும் நன்றி தெரிவித்தனர். அப்போது ஒரு சில பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் மகேசை சுட்டிக்காட்டி இவர் கண்டிப்பாக வெற்றி பெற்று உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றார்.

* இல்லத்தரசி திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு
நாகர்கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியளித்தார். அப்போது, உங்களுடைய இல்லத்தரசி கூப்பன் அறிவிப்பிற்கு மக்கள் வரவேற்பு எப்படி இருக்கு? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு முதல்வர், ‘‘ரொம்ப பிரமாதமா இருக்கு. திமுக தேர்தல் வாக்குறுதியில் இல்லத்தரசி திட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதனால தான், தோல்வி பயத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இப்போது தரக்குறைவா பேசி வருகிறார்’’ என்றார்.

* திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு யோகம் அடிச்ச மாதிரி பழனிசாமிகிட்ட நாகரிகத்தை எதிர்பார்க்க முடியுமா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘நெல்லை பொதுக்கூட்டத்துல தலைவர் கலைஞர் குறித்த பழனிசாமி தரங்கெட்ட பேச்சைக் கண்டிச்சு நான் பேசியிருந்தேன். அதைக் கேட்டு தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய கட்சிக்காரங்க போன்லயும் சமூக வலைதளங்கள்லயும் ஆதங்கத்தை என்கிட்ட கொட்டித் தீர்த்துட்டாங்க. ‘எங்க மனசுல இருந்ததைப் பேசிட்டீங்க, எங்க மனசுல என்னென்ன இருந்துச்சோ அதெல்லாம் பேசிட்டீங்க தலைவரே’ எனச் சொன்னாங்க. மறைந்த தலைவர்களைப் பற்றி இப்படித் தவறாகப் பேசுவது அரசியல் மாண்பு கிடையாது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போ அவரை எதிர்த்து, அவரது ஆட்சியின் குறைகளை எதிர்த்து நாம நேரடியாக அரசியல் செஞ்சிருக்கோம். ஆனால் அவர் மறைந்த பிறகு உச்சபட்ச அரசியல் நாகரிகத்தை நாம இன்றைக்கும் கடைபிடிச்சுக்கிட்டு இருக்கோம். திண்ணையில கிடந்தவனுக்குத் திடுக்குன்னு யோகம் அடிச்ச மாதிரி பழனிச்சாமிகிட்ட இந்த நாகரிகத்தை எதிர்பார்க்க முடியுமா? தமிழ்நாட்டு மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பாங்களே தவிர, வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டாங்க. பாஜகவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் துணிச்சலில்லை. அவருக்கு உதவியவர்கள் மேலேயே நன்றி உணர்ச்சி இல்லாமல் மனசு முழுக்கத் துரோகம் செஞ்ச நஞ்சுதான் இருக்கு. இப்படிப்பட்ட இவர் கொடுக்கிற வாக்குறுதிகளையும் தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை’’ என்றார்.

* மீனவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம்
‘‘இன்னைக்கு காலையில மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திச்சப்போ என்கிட்ட சில கோரிக்கைகளை உரிமையோடு வச்சாங்க. அதன் அடிப்படையில சில புதிய வாக்குறுதிகளையும் மீனவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்திலிருந்து உங்களுக்கு நான் வழங்குகிறேன். மீனவர் நல வாரியத்துல உறுப்பினர் சேர்க்கைக்கான வயது வரம்பு 65-லிருந்து 70 வயதாக உயர்த்தப்படும். மீனவர் நல வாரியத்துல உறுப்பினராக இருப்போருக்கு இப்போ வழங்கப்பட்டு வரக்கூடிய நலத்திட்டங்களோடு கூடுதலாக, அவங்களுடைய 70 வயது முதல் 75 வயது வரை மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்னு மகிழ்ச்சியோடு நான் தெரிவிச்சுக்கிறேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* ‘ஜெயிப்பீங்க… நீங்க தான் ஜெயிப்பீங்கனு கட்டாயம் தெரியும்’: காரில் சென்ற முதல்வரிடம் கைகுலுக்கி மாணவிகள் உற்சாகம்; வீடியோவை பகிர்ந்து முதல்வர் நெகிழ்ச்சி
நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவில் டபிள்யூசிசி ரோடு அருகே அவரது வாகனத்தை மக்கள் சூழ்ந்துகொண்டனர். பெண்கள் உற்சாகமாகப் பாடல்களைப் பாடியும், கோஷமிட்டும் முதல்வரை வரவேற்றனர். வாகனத்தின் ஜன்னல் வழியாக முதல்வர் பொதுமக்களின் கைகளைப் பற்றி வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். அப்போது ஒரு மூதாட்டி முதல்வரின் கைகளைத் தனது இரு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டு, ‘ஜெயிப்பீங்க… நீங்க தான் ஜெயிப்பீங்கனு கட்டாயம் தெரியும்’ என்று ஆணித்தரமாக கூறினார்.

இதைக் கேட்டு முதலமைச்சர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இளைஞர்களும், கல்லூரி மாணவிகளும் தங்களது செல்போன்களில் அவருடன் செல்பி எடுக்கப் போட்டி போட்டனர். சிறுவர்களிடம் முதல்வர் கைகுலுக்கிப் பேசியது உற்சாகத்தில் ஆழ்த்தியது. காரைச் சுற்றிலும் மக்கள் வெள்ளம் அலைமோதியதால், நீண்ட நேரத்திற்குப் பிறகே முதலமைச்சரின் வாகனம் அங்கிருந்து நகர முடிந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நாகர்கோவில் – சங்கரன்கோவில் செல்லும் வழியில்.. இந்த அன்பை வெல்லும் ஆற்றல் அவனியில் உண்டா! மீண்டும் உதயசூரியன்தான்!’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* மீண்டும் சோதனை; மீண்டும் கலந்துரையாடல்
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 10 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டு இருந்தார். நாகர்கோவில் பறக்கை விலக்கு பகுதியில், நின்ற அதிகாரிகள் குழுவினர் முதலமைச்சர் வாகனத்தை தடுத்து நிறுத்தி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.
அதை ஏற்று வாகனத்தில் இருந்து முதல்வர் இறங்கினார். பின்னர் அவர் வாகனத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 5 நிமிடம் சோதனை நடைபெற்றது. வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய மு.க.ஸ்டாலின், அந்த பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அங்கு நின்றவர்கள் அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது பொதுமக்கள் 200 தொகுதிகளில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் என்று கூறி, முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். பின்னர் சோதனை முடிந்து மீண்டும் வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

* பலவீனமான பிரதமர்
‘‘மீனவர்களின் உண்மையான நண்பனா, உற்ற தோழனா செயல்பட்டு வருது உங்கள் திராவிட மாடல் அரசு. ஆனா வெளியுறவுக் கொள்கையை கையில வச்சிருக்கக்கூடிய ஒன்றிய பாஜ அரசு, கடல் கடந்து மீன்பிடிக்கப் போகக்கூடிய நம்ம மீனவர்களைக் காக்கத் தவறிடுச்சு. தவறியது மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையில தோல்வியும் அடைஞ்சிருக்கு. சிறிய அண்டை நாடுகள் கிட்ட கூட இந்தியாவுக்குச் செல்வாக்கில்லாத நிலையை பிரதமர் மோடி உருவாக்கியிருக்கிறார். அதன் விளைவுதான் நம்ம மீனவர்கள் மேல இலங்கை கடற்படை தொடர் தாக்குதல்கள் நடந்துகிட்டு இருக்கு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்துல பிரதமர் மோடி என்ன சொன்னார்? மன்மோகன் சிங் என்ற பலவீனமான பிரதமர் ஆளுகிற காரணத்தால்தான் நம்ம மீனவர்கள் மீது தாக்குதல் நடக்குது, பலமான பிரதமராக நான் வந்தால் நடக்காது அப்படின்னு பேசினார். இப்போ நடக்குதா நடக்கலையா? இப்போதான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஏத்துக்குவாரா?’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: