சட்டமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது மிகப்பெரிய சதி, மோசடி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காரைக்குடி: காரைக்குடியில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசு வரும் 16, 17, 18 ஆகிய நாட்களில் நாடாளுமன்ற இரண்டு அவைகளையும் கூட்டுவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை 543ல் இருந்து 50 சதவீதம் கூட்டுவதாகவும் அதாவது 816 ஆக உயர உள்ளது எனவும், அதற்கான மசோதாவை கொண்டு வரப்போகிறார்கள். தொகுதிகளை மறுவரையறை செய்யும் மசோதாவும் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் பெரிய ஆபத்துக்கள் உள்ளது. தமிழ்நாட்டில் 39 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் பாஜவிற்கு எதிரானவர்கள். மேற்கு வங்கத்தில் 42 நாடாளுமன்ற தொகுதிகளில் 28 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள். 67 உறுப்பினர்கள் அவரவர் மாநிலத்தில் நடக்கவுள்ள தேர்தல் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பார்கள்.

தேர்தல் நாள் குறித்த பிறகு எம்பிகள் எப்படி தொகுதியை விட்டு டெல்லிக்கு போக முடியும்? இது ஒரு மிகப்பெரிய சதி. 67 எம்பிக்கள் சபைக்கு வரக்கூடாது என்பதற்காக இம்மாதம் நாள் குறித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பான கட்சிகள். அதுபோல மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக பேசக்கூடிய வாக்களிக்க கூடிய உறுப்பினர்கள்.

தற்போது உள்ள 543 மக்களவை தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கையை 816 ஆக 50 சதவீதம் கூட்ட வேண்டும் என்றால். அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். திருத்தம் கொண்டுவர, நாடாளுமன்ற அவை கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அங்கே வாக்களிப்பவர்கள் 3ல் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும். மக்கள் அவையில் 67 பேர், மாநிலங்கள் அவையில் சுமார் 25 முதல் 30 உறுப்பினர்களை கழித்து விட்டால் நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் திருத்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது. எதிர்கட்சிகள் அனைத்தும் எதிர்த்து வாக்களித்தால் மக்களவையிலும் இந்த அரசியல் சாசன திருத்த மசோதா தோல்வியடையும். அதற்காகத்தான் தமிழ்நாடு, மேற்குவங்க தேர்தல் 23ம் தேதி இருக்கும் நிலையில் வரும் 16, 17, 18 தேதிகளில் கூட்டத்தை வைக்கிறார்கள். இது மிகப்பெரிய மோசடி, மிகப்பெரிய சதி. இதனை அகில இந்திய காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதனை கடுமையாக எதிர்க்கிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: