புதுச்சேரி: புதுச்சேரியில் தடையை மீறி விஜய் நடத்திய ரோடுஷோவில் தவெகவினர் அத்துமீறி அட்டகாசத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். விஜய்க்காக நீண்ட நேரம் காத்திருந்ததால், பலர் மயங்கி விழுந்தனர். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் தவெக சார்பில் 28 பேரும், அதன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் சார்பில் 2 பேரும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து, பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் புதுச்சேரிக்கு விஜய் நேற்று காலை சென்றார்.
ஆங்காங்கே விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து ரசிகர்கள் அத்துமீறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். விஜய்யைப் பார்க்க சாலையோரம் காத்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென காரின் பேனட் மீது ஏறி கண்ணாடி மீது முத்தம் கொடுத்து அட்ராசிட்டி செய்தனர். ஒரு வழியாக அவர்களை பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அப்புறப்படுத்தினர். புதுச்சேரி எல்லையான கனகசெட்டிக்குளத்திற்கு வந்ததும் திடீரென விஜய்யின் கார் ஒரு ரிசார்ட்டுக்குள் சென்றது. பின்னர், அங்கிருந்த பிரசார வேனில் ஏறியபடி ரோடு ஷோவாக சென்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிறுவன் பிரசார வாகனம் மீது ஏறினார். அவரை பவுன்சர்கள் வேனில் இருந்து கீழே தூக்கி வீசினர். விஜய்யின் பிரசார வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பலர் பின் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். அப்போது டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடுரோட்டில் விழுந்தனர். தொடர்ந்து போலீசார் தடுத்தும் விடாமல் துரத்தியவர்களை தடியடி நடத்தி விரட்டினர். வாகனங்களில் பின்தொடர்ந்தவர்களின் சாவியை போலீசார் பறித்துக் கொண்டனர். கோட்டக்குப்பம் அருகே போலீசார் பேரிகார்டுகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். விஜய் பரப்புரை வாகனம் மற்றும் அவர் வந்த காரை மட்டும் அங்கு அனுப்பி வைத்தனர். இதனால் விஜய்யை பின் தொடர்ந்து வந்தவர்கள் மாற்றுவழியில் தட்டாஞ்சாவடி பகுதிக்கு வந்தனர்.
கனகசெட்டிகுளத்தில் துவங்கிய இந்த ரோடு ஷோ கொக்கு பார்க் வரை சுமார் 20 கி.மீ., தூரத்துக்கு நடைபெற்றது. விஜய் ரோடு ஷோ வந்தபோது, எதிர்திசையில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். ஒரு வழியாக காலை 11 மணிக்கு கொக்கு பார்க் சிக்னல் அருகே உள்ள தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் வேனில் நின்றபடி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறி தவெகவினர் ஏராளமான பெண்களை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் அழைத்து வந்தனர். அங்கு திரண்டிருந்த சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். சாலையோரம் உள்ள சிமென்ட் சிலாப் மேல் ஆபத்தை உணராமல் பெண்கள் மற்றும் தொண்டர்கள் ஏறி நின்றிருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், ஒவ்வொருவராக எச்சரித்து மாற்று பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
கூட்டத்தில் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்ததால் இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனே பவுன்சர்கள், தவெகவினர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதேபோல் வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 4 பேர் மயங்கி விழுந்தனர். உடனே அங்கிருந்த தவெகவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். புதுவையில் பிரசாரத்துக்கு மட்டுமே தேர்தல்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனுமதி அளித்திருந்த நிலையில் தடையை மீறி ரோடு ஷோ நடத்தியதால் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. விஜய் பிரசாரத்தால் புதுவை முழுவதும் போக்குவரத்து முடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
* பெண் எஸ்பி மீது மோதுவதுபோல் வந்த விஜய் வேன்
மார்க்கெட்டிங் கமிட்டி பகுதியில் முதல் பிரசார கூட்டத்தை முடித்துவிட்டு வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்துக்கு விஜய் புறப்பட்டார். அப்போது இந்திரா காந்தி சதுக்கத்தில் விஜய் பிரசார வாகனத்தை ரசிகர்கள் குறுக்கிட்டு மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலிருந்த எஸ்பி ரக்சனா சிங், தொண்டர்களை அப்புறப்படுத்தினார். அதிவேகமாக வந்த விஜய் பிரசார வேன், எஸ்பி மீது மோதுவதுபோல் வந்தது. சுதாரித்துக் கொண்ட எஸ்பி சற்று விலகியதால் மயிரிழையில் உயிர் தப்பினார். உடனே அதிர்ச்சியில் தனது வேனை நிறுத்திய விஜய், வாகனத்தின் மேலே நின்றபடி முகத்தை காட்டினார். அதன்பிறகும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்தி தவெகவினரை அப்புறப்படுத்தினர்.
* வேனுக்குள் தர்பூசணி வீச்சு
விஜய் நடத்திய ரோடுஷோவில் இரு பக்கமும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள், பிரசார வாகனத்தில் வந்த விஜய் மீது கட்சி துண்டு, பூச்செண்டு, வாட்டர் பாட்டில், குளிர்பானம், குடை ஆகியவற்றை அவர் மீது வீசினர். அப்போது ஒரு சில பொருட்களை விஜய் லாவகமாக கேட்ச் பிடித்து நன்றி தெரிவித்து, பிரசார வேனுக்குள் வழங்கினார். கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே முழு தர்பூசணியை கையில் வைத்திருந்த ஒருவர், விஜய் வேனுக்குள் தூக்கி வீசினார். இது, வேனுக்குள் அமர்ந்திருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலையில் விழுந்து உடைந்துள்ளது என தெரிவித்து, இதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
* பாஜ வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த விஜய்
புதுச்சேரி தவளக்குப்பம் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மணவெளி தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து விஜய் பேசினார். அப்போது மணவெளி தொகுதியில் வேட்பாளர் செல்வத்துக்கு வாக்களிக்குமாறு கூறினார். அப்போது அருகில் இருந்த வேட்பாளர் சோகத்தில் ஆழ்ந்தபடி, தன்னுடைய பெயர் ராமு என்றும், நீங்கள் பாஜ வேட்பாளரும், சபாநாயகருமான செல்வத்தின் பெயரை கூறுவதாக சுட்டிக்காட்டினார்.
