நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் அமைப்பினர் தேர்வு மையங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இன்று நீட் தேர்வானது நடைபெற உள்ளது. நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வின் நிர்பந்தத்தாலும், அச்சத்தாலும் தற்கொலை செய்துகொண்டனர். இந்த நிலையில், நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றனர். நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மோதிலால் என்ற 20 வயது இளைஞன் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவருடைய சடலம் இன்று காலை திருச்செங்கோடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக திருச்செங்கோடு அண்ணா சிலைக்கு முன்பாக மாணவர் சங்கத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மத்திய அரசு, மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது.

 இதனால் நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி என்பது கனவாகி விடுகிறது, உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி தற்போது இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நீட் தேர்வால் உயிரிழந்துள்ள மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: