தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்...!! கிருஷ்ணகிரியில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு!!!

மதுரை:  பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விவசாயிகள் அல்லாதோரை சேர்த்து பணம் மோசடி செய்யப்பட்டதில் வேளாண் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுத்து வருகிறது. பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு நடந்தேறிய மாவட்டங்கள் பட்டியலில் தற்போது கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களும் இணைந்துள்ளன. அதாவது கிசான் திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தேறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மதுரையில் விவசாயிகள் அல்லாதோர்களை சேர்த்து சுமார் 40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இடைத்தரகர்கள் மூலம் போலியான ஆவணங்களை கொடுத்து மோசடி அரகேற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேர்க்கப்பட்டிருந்த 10700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து போலி பயனாளர்களிடமிருந்து சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், இதுபோன்ற மோசமான முறைகேட்டில் வேளாண்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி என தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் அல்லாதோரை பயனாளியாக சேர்த்திருப்பது வேளாண் அதிகாரிகளின் உதவியின்றி நடந்திருக்க சாத்தியமில்லை என கூறப்படுகிறது. ஆகவே ஒப்பந்த ஊழியர்கள், கணினி மைய உரிமையாளர்கள் ஆகியோரை மட்டும் குறிவைப்பதை விடுத்து, பயனாளிகளை சேர்ப்பதில் வேளாண்துறை அதிகாரிகளுக்குள்ள பங்குகளை குறித்தும் சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: