சேலம்: தொடர் மழையால் செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக சூளை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கட்டுமான பணிக்கு முக்கிய மூலப்பொருட்களில் செங்கல் ஒன்றாகும். தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. இந்த சூளைகளில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மார்ச் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனால் செங்கல் சூளைகளும் மூடப்பட்டன. செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் பல்வேறு தளர்வுகளுடன் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமான பணிகளும் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. செங்கல் சூளையில் இருப்பில் இருந்த செங்கல்கள் வேகமாக விற்பனையாகின. இதனால் செங்கல் சூளைகளில் உற்பத்தி பணியும் மும்முரமாக நடந்து வந்தது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இம்மழையால் செங்கல் சூளைகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக புதிதாக செங்கல் உற்பத்தி இல்லாமல் போனது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்கள் காயாமல் ஈரப்பதத்துடன் உள்ளது. இப்படி ஈரமாக இருப்பதால் சூளைகளில் சுட முடியவில்லை என்று சூளை உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.இது குறித்து சேலம் குள்ளம்பட்டியை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் வலசையூர், குள்ளம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி, சுக்கம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், பள்ளிப்பட்டி, ஓமலூர், ஆட்டையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் செங்கல் சூளைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் செங்கல்கள் உற்பத்தி செய்யப்படும்.
கடந்த ஒரு வாரமாக உற்பத்தி இல்லாதால் தொழிலாளர்கள், சூளை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியே தொடர்ந்து மழை பெய்ததால் எதிர்வரும் நாட்களில் செங்கலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் கட்டுமான பணிகள் பாதியில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும். ஒரு செங்கல் தரத்திற்கு ஏற்ப ₹5.50 முதல் ₹6 வரை விற்கப்படுகிறது.இவ்வாறு சூளை உரிமையாளர்கள் கூறினர்.