ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கொரோனா முற்றிலும் விலக பெண்கள் மகா கூட்டு வழிபாடு

மதுராந்தகம்: கொரோனா தொற்று முற்றிலும் விலகி, மக்கள் நலம் பெற வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்கள் பக்தர்கள் பங்கேற்று மகா கூட்டு வழிபாடு நடத்தினர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பவுர்ணமி நாளான நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் ஆசியுடன் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை நடத்தி தரிசனத்துக்கு அனுமதித்தனர். மாலை 6.30 மணிக்கு உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் விலகி மக்கள் நலம்பெற வேண்டியும் பெண்கள் நடத்தும் மகா கூட்டு வழிபாடு நடந்தது. இதில், குருவே போற்றி, உலக நன்மை வேண்டி சங்கல்பம் மற்றும் 108 ஆதிபராசக்தி அம்மன் போற்றி மற்றும் மந்திரங்கள் படித்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் வழிகாட்டுதலின்பேரில், துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்தனர்.

Related Stories: