ஓபிஎஸ் மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது கோஷ்டி மோதல் முதல்வர் எடப்பாடி பெயர் கல்வெட்டில் புறக்கணிப்பு: ஆண்டிபட்டி அருகே பரபரப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஹைமாஸ் விளக்கு திட்ட மதிப்பீட்டு கல்வெட்டில், முதல்வர் பெயர் புறக்கணிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர்கோபுர மின்விளக்கு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இப்பணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென கல்வெட்டு வைக்கப்பட்டது. இக்கல்வெட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதி முன்னாள் எம்பி பார்த்திபன் உள்ளிட்டோர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் இல்லாததால், அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஏற்கனவே, ‘முதல்வர் ஓபிஎஸ்’ என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது அதிமுகவில் இருக்கும் கோஷ்டி பூசலை வெளிக்காட்டியது. சமீபத்தில் பெரியகுளத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்’ என துணை முதல்வர் தெரிவித்தார். தற்போது கல்வெட்டில் முதல்வர் பெயர் இல்லாதது அதிமுகவினரின் உள்கட்சி மோதலை வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Related Stories: