சிறிய மழைக்கே குளமான சாலை: வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து

காளையார்கோவில்:  காளையார்கோவில் ஊராட்சியில் அனைத்து ரோடுகளும் நேற்று பெய்த சிறு மழைக்கே ரோடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  பல வருடங்களாக ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பகுதி கிராம பொதுமக்கள் கூறுகின்றார்கள். காளையார்கோவில் சோமசுந்தரம் நகரில் 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசதித்து வருகிறார்கள். அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சிமென்ட்  ரோடு பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அந்த ரோட்டின் வழியாக வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், வெளியூர் பொதுமக்கள் மற்றும்  அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி

வரும் பிரதான சாலையாகும். இச்சாலையில் நேற்று பெய்த சிறு மழைக்கே குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகின்றது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.  இதேபோல திருநகர், கிருஷ்ணாநகர், செந்தமிழ்நகர், துதிநகர் உள்பட காளையார்கோவிலில் உள்ள 20க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 15  வருடங்களுக்கு முன்னால் போடப்பட்ட சாலைகள் தற்போது இருந்த இடமே தெரியாமல் குண்டும் குழியுமாக ஜல்லிகள் மட்டுமே தெரிகின்றன.  ஒவ்வொறு தெருக்களிலும் 10 மீட்டருக்கு ஒரு இடத்தில் ரோடு கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த சிறு மழைக்கே ரோட்டை  பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிடுகின்றது. இருசக்கர வாகனங்கள் விபத்துக்களைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. மேலும் நடந்து செல்பவர்களின் பாதங்களை ஜல்லி கற்கள் பதம்பார்த்து விடுகின்றன. அவசர காலங்களில் பயன்படுத்தவே முடியாத சாலையாக  உள்ளது. இதுபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் உள்ள சிமென்ட் மற்றும் தார் பெயர்ந்து மேடு பள்ளமாக உள்ளதால்  விபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories: