தேனி அருகே கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் - தண்ணீரில் விஷம் கலந்ததால் பரபரப்பு

தேனி:  தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாயில் மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவை மீன்வள சங்கங்கள் சார்பாக மீனவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதனையடுத்து மீனாட்சியம்மன் கண்மாய் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு மீன் குஞ்சிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் தண்ணீரில் விஷம் கலந்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாலையில் கண்மாயில் உள்ள அனைத்து மீன்களும் செத்து மிதந்ததால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசியது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் கண்மாய்க்கு சென்று பார்த்தபோது அனைத்து மீன்களும் செத்து கிடைத்துள்ளன. இதனை கண்ட மீனவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக குத்தகைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் கண்மாய் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக நீரை பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து கண்மாயில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஷம் கலந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: