மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட 183 விநாயகர் சிலைகள் நிபந்தனைகளுடன் ஒப்படைப்பு..!!

மதுரை: மதுரையில் 183 விநாயகர் சிலைகள் நிபந்தனையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதை போன்று விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். இது தொடர்பாக தமிழக முதல்வரையும் சந்தித்தார்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் இந்த கோரிக்கை என்பது முழுமையாக நிராகரிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது அங்கு வழிபடுவதற்காக பலர் வரக்கூடும்.

இதனால் கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஆதலால் விநாயகர் சதுர்த்தியை அவரவர் வீடுகளில் கொண்டாட வேண்டும் என நீதிமன்றமும் அதேபோன்று தமிழக அரசும் வலியுறுத்தியது. இதனிடையே மதுரை இந்து முன்னணி அமைப்பினர் விழா நடத்த கொண்டு வந்த கிட்டத்தட்ட 183 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை அனுபானரி பகுதியில் உள்ள குடோனில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வைக்கப்பட்டது. 3 முதல் 5 அடி உயரம் கொண்டதாக இந்த விநாயகர் சிலைகள் இருப்பதை கண்ட போலீசார் சிலைகளுக்கு முழுமையான பாதுகாப்பு அளித்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்த சிலைகளை வீடுகளிலும், அருகில் உள்ள கோவில்களிலும் வைப்பதற்கு தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. மதுரை காவல்துறை ஆணையரிடமும் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் நிபந்தனையுடன் விநாயகர் சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்:

* உயரம் 3 அடிக்கு குறைவாக உள்ள சிலைகளை வீடுகளில் வைத்து வழிபடலாம்.

*  5 அடி உள்ள விநாயகர் சிலைகளை கோவிலில் வைத்து வழிபட அனுமதி.

* விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி மறுப்பு.

* விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடத்திலேயே கரைத்துக்கொள்ள வேண்டும்.

* பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதியில்லை போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட 183 விநாயகர் சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: