தமிழக அரசின் விலையில்லா முகக் கவசங்களில் தரமில்லை': மக்களின் உயிரோடு விளையாடுவதாக பொதுமக்கள் புகார்..!!

சென்னை: கோவிட் - 19 என்ற உயிர்கொல்லி கிருமியிடம் இருந்து தம்மை பாதுகாக்கும் முக்கிய அரண்களில் ஒன்றாக முகக்கவசங்கள் விளங்குகின்றன. இதனை உணர்ந்துள்ள தமிழக அரசு முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அரசு தரும் விலையில்லா முகக் கவசங்களில் தரமில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நீல வண்ணத்தில் தரமற்ற துணியால் செய்யப்பட்ட முகக்கசவம். ஒருபுறம் பார்த்தால் மறுபுறம் தெளிவாய் தெரியும் தன்மை. காற்று சுலபமாய் ஊடுருவும் அளவுக்கு தரமின்மை. இதுதான் நியாயவிலை கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கி வரும் இலவச முகக்கவசம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற தரமற்ற முகக்கவசங்களால் தொற்றினை எள்ளளவுக்கும் தடுக்க முடியாது என்று பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் விலையில்லா முகக் கவசங்களில் தரமில்லை என்பது தமிழக மக்களின் குற்றச்சாட்டு. இலவசம்தானே என்று கேள்வி எழுப்புவோருக்கு தங்க ஊசியாக இருப்பினும் கண்ணை குத்திக்கொள்ள முடியுமா என்பது மக்களின் பதிலாக இருக்கிறது. மின்னுவதெல்லாம் மாஸ்க் ஆகிவிடாது என்று கூறும் பொதுமக்கள், விலையில்லா முகக்கவசத்தின் பின்னணியில் பெரும் ஊழல் மறைந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு விநியோகித்து வரும் தரமற்ற இலவச முகக்கவசங்களால் நோய் தொற்றும் இலவசமாக விநியோகமாகும் பேராபத்து இருப்பதாக மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். 2 லேயர், 3 லேயர், காட்டன், என் - 95 அவ்வளவு ஏன் வெட்டிவேரால் ஆன மூலிகை முகக்கவசம் கூட சந்தைக்கு வந்துவிட்ட நிலையில், தமிழக அரசின் இலவச முகக்கவசத்தால் பலன் ஏதும் இல்லை என்பதும் கொள்முதலின் போது தரக்கட்டுப்பாடு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டது எப்படி என்பதும் தான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

Related Stories: