சென்னையில் மாஞ்சா நூலைக் கொண்டு பட்டம் விட்ட 45 பேர் கைது!: 164 பட்டங்கள் பறிமுதல்..போலீசார் நடவடிக்கை..!!

சென்னை: சென்னையில் மாஞ்சா நூலைக் கொண்டு பட்டம் விட்டதாக ஒரே நாளில் 45 பேர் கைது அதிரடியாக செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடும் போது பலர் இறப்பது தொடர்கதையாக உள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதைத் தடுப்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாஞ்சா நூல் பட்டம் விடுவதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் போலீஸாா் கடந்த மாதம் முதல் ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் கண்காணித்து வருகின்றனா்.

மாஞ்சா நூலை கொண்டு பட்டம் விடுவது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மாஞ்சா நூலைக் கொண்டு பட்டம் விடுவது பல இடங்களில் தொடர்கிறது. இந்நிலையில் மாஞ்சா நூலைக் கொண்டு பட்டம் விட்டதாக ஒரே நாளில் 45 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வடசென்னைக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் அதிரடியாக களமிறங்கினர். அதில் பூக்கடை பகுதியில் இருந்து 9 பேர் கைது செய்யப்பட்டனர். வண்ணாரப்பேட்டை, மாதவரம் பகுதிகளில் இருந்து 36 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து சுமார், 164 பட்டங்கள், மாஞ்சா நூல் தயாரிக்கும் கருவி மற்றும் 36 மாஞ்சா நூல் கண்டுகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். என்றாலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: