மழை வெள்ளத்தால் குமுளி மலைப்பாதை சேதம்: நீரோடை அமைக்க கோரிக்கை

கூடலூர்: குமுளி மலைப்பாதையில் மழை வெள்ளத்தால் சாலை சேதமாவதோடு அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க நீரோடை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் - கேரளாவை இணைக்கும் முக்கிய பாதையில் குமுளி மலைப்பாதையும் ஒன்றாகும். இது லோயர்கேம்பிலிருந்து ஆறு கி.மீ தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்பவர்கள் இந்த மலைப்பாதையை பயன்படுத்துகின்றனர். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாகனப்போக்குவரத்து குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு, மரம் விழுவது என தொடர்கிறது. சிறு, சிறு மண்சரிவுகளை போலீஸ் குழு அகற்றியது. இந்நிலையில், மீண்டும் கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல்மண்சரிவு ஏற்படுவதற்கு மழைநீர் முறையாக வெளியேறுவதற்காக ரோட்டோரத்தில் நீரோடை இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதனைக் கட்டுவதற்கு அனுமதி தருவதில் வனத்துறையினர் காலதாமதம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

மழைநீர் முறையாக வெளியேறிவிட்டால் மண்சரிவு ஏற்படாது. அதனால், உடனடியாக ரோட்டோரத்தில் நீரோடை அமைக்க முன்வரவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தள்ளனர். இதுகுறித்து கூடலூர் ரேஞ்சர் அருண்குமார் கூறுையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண் அகற்றும் பணி நடந்து வருகிறது. ரோட்டோரத்தில் நீரோடை அமைக்க வனத்துறை உயரதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று பணிகள் செய்யலாம்’’ என்றார்.

Related Stories: