டெல்லியில் செயல்படும் சீன நிறுவனங்களில் வருமான வரி ரெய்டு: ரூ.1,000 கோடி நிதி மோசடி அம்பலம்

புதுடெல்லி: டெல்லியில் செயல்படும் சீன நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில், ரூ.1,000 கோடி மதிப்பில் நிதி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து அட்டகாசம் செய்து வரும் சீனா, இந்திய வீரர்கள் 20 பேரை அடித்துக் கொன்றது. இதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. அதோடு, இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தப்பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் தொழில் செய்து வரும் சீன நிறுவனங்கள் ஹவாலா, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாகப் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் டெல்லியிலுள்ள சீன நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், இவை போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, ரூ.1,000 கோடிக்கு நிதி மோசடி செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் இதற்கு உடந்தையாக இருந்து, ரூ.100 கோடியை சீன நிறுவனங்களிடம் பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், வருமான வரித்துறையின் சோதனை மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Related Stories: