‘கட்சி தொண்டர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்’ ராகுல் காந்தியிடம் பதவி கேட்கவில்லை: அதிருப்தி எம்எல்ஏ சச்சின் பைலட் விளக்கம்

புதுடெல்லி: ‘‘ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடனான சந்திப்பின்போது, எந்த பதவியும் கேட்கவில்லை. மாறாக கட்சியில் தொண்டர்களுக்குரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று மட்டுமே பேசினேன்,’’ என்று சச்சின் பைலட் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. பைலட் தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேருடன் கட்சியில் இருந்து வெளியேறினார். இதனால், அவரது துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு, எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு ஆகியவை நீதிமன்ற விசாரணையில் உள்ளன.

இதனிடையே, நாளை மறுநாள் சட்டப்பேரவை கூட்டப்பட உள்ள நிலையில், கெலாட் அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில், சச்சின் பைலட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேற்று முன்தினம் திடீரென சந்தித்தார். இதன் மூலம், கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் நிலவிய குழப்பத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தான் குழப்பத்தை தீர்ப்பதற்காக பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், அகமது படேல் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், டெல்லியில் சச்சின் பைலட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் ஜனநாயக ரீதியிலான அமைப்பு என்பதால், ராஜ்ஸ்தான் அரசு நிர்வாகம், அதன் செயல்பாட்டில் உள்ள குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டினோம். கட்சியில் தொடர்ந்து நீடிப்போம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளோம். எங்களின் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று பேர் குழுவிடம், எங்கள் குறைகளை தெரிவித்தோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மக்கள் பணியாற்ற கட்சியில் எங்களுக்கான இடம் கிடைக்கவில்லை. சுதந்திரம் இல்லாததால், தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பற்ற முடியாமல் போனது. கடந்த ஆறரை ஆண்டுகளாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த போது, கட்சிக்காக அயராது உழைத்தேன். 2013 தேர்தலில் 21 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், 2018 தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற செய்தேன். ஆட்சி அமைத்த பிறகு, மாநில தலைவராக கட்சி தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எனது கடமையாகும். ஆனால், அதற்கு பல்வேறு இடையூறுகள் எழுந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

* இன்று வரும் நாளை போகும்

சச்சின் பைலட் கூறுகையில், ``இழிவான, தனிப்பட்ட பழிவாங்கும் அரசியல் ஒரு போதும் கூடாது. எனது அரசியல் உண்மை, கொள்கையை அடிப்படையாக கொண்டது. எந்த பதவி மீதும் எனக்கு பேராசை கிடையாது. பதவி இன்று வரும்; நாளை போய்விடும்,’’ என்றார்.

* என்னுடைய பொறுப்பு

ஜெய்சல்மாரில் முதல்வர் கெலாட் அளித்த பேட்டியில், ``எம்எல்ஏ.க்கள் யாருக்காவது என்னுடன் கருத்து வேறுபாடு இருந்தால், அதற்கு தீர்வு காண வேண்டியது என்னுடைய பொறுப்பு. இதற்கு முன்பும் இதுபோல் செய்துள்ளேன். இனிமேலும் இதனை பின்பற்றுவேன்,’’ என்றார்.

Related Stories: