முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று: ராணுவ மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 முதல் 2017ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி (84 வயது) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘வேறு சில காரணத்திற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு எனக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது பிரணாப் முகர்ஜி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

* குணமடைந்தார் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த 2ம் தேதி இரவு சுயமாக மருத்துவ பரிசோதனை செய்தபோது, அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை பெங்களூரு மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 9 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் நேற்று அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து மாலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, காவேரி இல்லத்திற்கு சென்ற அவர் 2 நாட்கள் ஹோம் குவாரன்டைனில் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: