பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு!: சி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை..!!

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு விசாரணையில் மராட்டிய போலீசாருடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் சி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்துள்ளது. கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்து, புகழ்பெற்ற நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் 15ம் தேதி மும்பையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீகாரை சேர்ந்தவரான சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், இதில் அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து பீகார் தனிப்படை போலீசார் மும்பையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களுக்கு மும்பை அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பீகார் போலீசார் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே நேற்று மும்பை சென்ற பாட்னா மாவட்ட எஸ்.பி. திவாரியின் கையில் தனிமைப்படுத்தலுக்கான முத்திரை குத்தப்பட்டது.

அத்துடன் அவர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டார். இதற்கு பீகார் முதலமைச்சர் நித்திஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 50 நாட்களாக எந்த துப்பும் கிடைக்காத நிலையில், சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து 50 கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதனை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மும்பை போலீசாரை பீகார் காவல்துறை சாடியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்துள்ளது.

Related Stories: