61 வயதான மெகபூபா முப்தியால் என்ன ஆபத்து நேரிடும்? ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி:  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா,  மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம்  பாய்ந்தது. பின்னர், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

 இந்நிலையில், மெகபூபா முப்தியும் விடுதலை செய்யப்படுவார் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவரின் காவலை மேலும் 3 மாதத்துக்கு ஜம்மு அரசு நீட்டித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மெகபூபா முப்தியின் காவலை 3 மாதங்கள் நீட்டித்து இருப்பது, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும். அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் கூட. 61 வயதான முன்னாள் முதல்வரான அவர், எப்போதும் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பில் இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது, அவரால் பொது பாதுகாப்புக்கு என்ன அச்சுறுத்தல் வந்து விடப் போகிறது? அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,’  என்று கூறியுள்ளார்

Related Stories: