ஏரியில் குதித்து பெண் தற்கொலை: ட்ரோன் மூலம் குழந்தையின் சடலம் மீட்பு : உருக்கமான கடிதம் சிக்கியது

ஆவடி: ஆவடி அடுத்த சேக்காடு டி.ஆர்.ஆர் நகர்,  திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர், டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு, இளவரசி (5) நிகிதா (3), தபிதா (9மாதம்) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளன.

கடந்த 26ம் தேதி புவனேஸ்வரி, தபிதாவுடன் வீட்டில் இருந்து மாயமானார். மறுநாள் ஆவடி அடுத்த சேக்காடு ஏரியில் புவனேஸ்வரி சடலம் மிதந்தது. தகவலறிந்த ஆவடி இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார்  சடலத்தை கைப்பற்றினர்.  மேலும், தீயணைப்பு வீரர்கள் அவரது 9 மாத பெண் குழந்தையும் ஏரியில் பல மணி நேரம் தேடினர். ஆனால், குழந்தை தபிதா உடல் கிடைக்கவில்லை. மேலும், புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், போலீசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது,  “எனது நல்ல குணநலங்கள் வீணாகிப் போய் வருகிறது.  எனது பிரச்னைகளை மறந்துவிட வேண்டும் என தினமும் கடவுளை வேண்டுகிறேன். எல்லாரும் என்னை கோமாளியாக நினைக்கிறார்கள். எனது பிரச்சினைக்கு நல்ல முடிவு கொடுக்க வேண்டுகிறேன். எனவே, நான் சாக முடிவெடுத்துள்ளேன்” இவ்வாறு அதில் கூறியுள்ளார். மேலும், போலீசார் விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக புவனேஸ்வரி குழந்தையை ஏரியில் வீசி கொன்று, அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். குழந்தை தபிதா ஏரியில் சேற்றில் செடி, கொடிகளுடன் சிக்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதன் பிறகு, போலீசார் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுடன் ஏரியில் குழந்தையை தேடி வந்தனர். இருந்த போதிலும் குழந்தையை தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.  இந்நிலையில், நேற்று காலை போலீசார் ட்ரோன் கேமரா மூலமாக குழந்தையின் சடலத்தை தீவிரமாக தேடினர். அப்போது, ஏரியின் மையப் பகுதியில் குழந்தை தபிதா சடலம் மிதந்தது கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர், போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்க்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், புவனேஸ்வரி தற்கொலை குறித்து ஆர்.டி.ஓவும், போலீசாரும்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: