பழவேற்காட்டில் மதியம் 2 மணி வரை கடைகள் திறப்பு: கிராம சபையில் தீர்மானம்

பொன்னேரி: பழவேற்காடு ஊராட்சியில் அதிவேகத்தில் கொரோனா பரவுவதால், மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் திறக்க வேண்டும் என ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், பழவேற்காடு பகுதியில் தொற்று ஏற்பட காரணமாக இருக்கும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் மார்க்கெட் பகுதியில் கடைகள் திறப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பழவேற்காடு சுற்று வட்டார பகுதியில் கஞ்சா, பான் குட்கா போன்ற போதை பொருட்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பழவேற்காடு மதுபான கடைக்கு வரும் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு அவ்வழியே வரும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் அத்துமீறி நடப்பதாகவும், குடித்துவிட்டு பாட்டில்களை உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை செய்வதாகும் கூட்டத்தில் புகார் அளித்தனர். அதன்படி, பழவேற்காடு மதுபானக்கடை குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்க தீர்மானம் இயற்றப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: