ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் விவகாரத்தில் இழப்பீடு வேண்டாம், நியாயம் வேண்டும்: ஜெ.தீபா பேட்டி

சென்னை: வேதா இல்லம் விவகாரத்தில் எங்களுக்கு இழப்பீடு வேண்டாம், நியாயம் மட்டுமே வேண்டும் என ஜெ.தீபா கூறியுள்ளார். ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக தொண்டர்களிடம் எனக்கு நியாயம் வழங்கும்படி கேட்கிறேன். ஜெயலலிதாவின் ரத்த வழியில் இருக்கக்கூடிய தீபாவும், தீபக்கும் உங்கள் குடும்பம் தான். எங்களை உங்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் மன்றாடி கேட்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எனக்கு பூர்வீக சொத்து கிடைக்க வேண்டும். வேதா இல்லத்தை வைத்து நடந்து கொண்டிருக்கும் இந்த அக்கிரமத்திற்கு ஒரு முடிவு வேண்டும்.

இதை அதிமுக தொண்டர்களாகிய உங்களால் மட்டுமே செய்ய முடியும்.

எங்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருந்து, எங்களின் சொத்துக்களை நாங்கள் மீட்டெடுக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வேதா இல்லத்திற்கு ஒரு பூர்வீகமே உள்ளது. எங்களின் பாட்டி காலத்தில் கட்டப்பட்டது. அரசு வழங்கும் இழப்பீடு தொகை எங்களுக்கு தேவை இல்லை. எங்களுக்கு நியாயம் மட்டுமே வேண்டும். பொதுத்தேர்தல் வரும் இந்த காலகட்டத்தில் ஒரு அரசியல் நாடகமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காக மட்டுமே வேதா இல்லத்தை அரசுடமையாக்குகிறார்கள். ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்று நீதிமன்றமே அங்கீகரித்த தீபாவும், தீபக்கும் இன்று அனாதைகளாக இருக்கின்றனர்.

 இதற்கு அதிமுக அரசு தான் பொறுப்பு. அதிமுக அரசு நியாயமாக நடக்கவில்லை. நிலத்தை மட்டுமே அரசு கையகப்படுத்த முடியும். அதில் உள்ள பொருட்களை அரசு எடுத்துக்கொள்ள முடியாது. அதிமுக அரசு தவறாக நடக்கிறது. எனவே, இதில் குளறுபடிகளும், ஏமாற்றுவேலைகளும் உள்ளன. எனக்கு நடந்த இந்த நிலை நாளை தமிழக மக்களுக்கே நடக்கலாம். எங்களுக்கு நியாயம் கிடைக்க மக்கள் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு தீபா கூறினார்.

Related Stories: