கோட்டார் ரயில்வே சாலையில் கிடப்பில் போடப்பட்ட பாலம் விரிவாக்க பணி

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையம் செல்லும் பகுதியில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாலை நேரங்களில் ரயிலை பிடிக்க செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து கோட்டாரில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் ஆக்ரமிப்புகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த சாலை இரண்டரை மீட்டர் அளவிற்கு அகலம் ஆகியுள்ளது.

இந்த சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால், இருவழிச் சாலையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ரயில் நிலையம் செல்லும் பாதையில் இரண்டு தரைபாலங்கள் உள்ளன. இந்த பாலங்களையும் விரிவுப்படுத்த மாநகராட்சி முடிவு ெசய்தது. அதன்படி முதல் பாலம் மூன்றரை மீட்டர் அளவிற்கு கூடுலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு பாலம் தற்போது 8.5 மீட்டர் அகலத்திற்கு உள்ளது. இந்த பாலத்தின் ஒரு புறம் 5 மீட்டர் வீதம் இருபுறமும் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பாலம் 18.5மீட்டர் அகலத்திற்கு மாற்றப்படவுள்ளது. பாலம் விரிப்படுத்தும்பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

பாலப்பணி முதலில் வேகமாக நடந்தது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டு புதிய ஆணையர் வந்தபிறகு இந்த பணி நடக்கவில்லை. இதனால் பழைய பாலத்தின் இருபுறமும் எந்த வித தடுப்பும் இல்லாமல் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பரக்கின்காலில் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: இந்த பாலம் ரூ.25 லட்சம் செலவில் கட்டமுடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு முறையான டென்டர் விடாமல் பணி தொடங்கியது.

இந்நிலையில் ஆணையர் மாற்றப்பட்டதால், பணி தொடர்ந்து நடக்கவில்லை என்றார். பாலப்பணியை விரிவுப்படுத்தினால் வாகன நெருக்கடி ஏற்படாது. இதனை கருத்தில் கொண்டு பாலப்பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: