கோவில்பட்டி: தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் மார்ச் 19-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தியதால் திரையரங்குகள் இப்போது வரை மூடியே உள்ளன. 6-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் சூழல், பல தொழில்துறையினருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதிலும் திரையரங்கம் திறப்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்புமே இல்லை. அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்க தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தரக்கூடியது. இந்த தொழில் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.
இந்த நிலையில் இன்று கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள்: கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது என்றார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது..