திமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: திமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஆளும் தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் (28), மதிமுக (4), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (2) ஆகிய 5 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. எஞ்சிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தீவிரப்படுத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை ஒருபுறம் நடத்தி வரும் திமுக மறுபுறம் தங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்வையும் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு கடந்த மாதம் 20ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்து 372 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுகவில் விருப்ப மனு முடிவடைந்த நிலையில் வேட்பாளர் நேர்காணல் இன்று (மார்ச்.17) தொடங்க உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார். இன்று தொடங்கி 22ம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

நாளை மார்ச் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கும், நாளை மதியம் மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

நாளை மறுநாள் மார்ச் 19 ஆம் தேதி காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது. மார்ச் 20 ஆம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

Related Stories: