குழப்பம், குளறுபடி, அந்தர்பல்டி திட்டமிடாமல் திணறும் பள்ளி கல்வித்துறை: மாணவர்களின் நலன் காக்கப்படுமா?

எல்லாவற்றிலும் முதன்மையானது கல்வி. மாணவர்களை அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் சமூக நிறுவனம் அது. பண்பாடு, நடத்தை போன்றவற்றையும் அளித்து முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றுவதே கல்வி. நாட்டின் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது கல்விமுறை. காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து அரபு நாடுகள் மீண்ட பின், எண்ணெய் புரட்சியால் அந் நாடுகள் வளம் கண்டன. ஆனால் முறையான கல்வி இல்லாததால் அதை நிர்வகிக்க அரபு நாடுகள் திணறின. இதனால் பல நாடுகளிலிருந்தும் துறைசார் வல்லுனர்களையும், திறனாளர்களையும் கொண்டுவந்து நிர்வாகம் செய்ய வேண்டி வந்தது. பின்னர் கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களை எல்லாம் தங்கள் நாட்டுக்கு கொண்டுவந்து குடிமக்களுக்கு உயர்தர கல்வியை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இங்கோ நிலை தலைகீழாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாணவர்களை செம்மையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பள்ளி கல்வித்துறையின் நிலை தற்போது பரிதாபகரமாக மாறியிருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் தொடங்கி கல்வி அமைச்சர்கள் தொடர்ந்து நிலையில்லாது மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எடப்பாடியின் ஆட்சிக் காலத்தில் இன்னும் பல குளறுபடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. புதிய பாடத் திட்டம் என 5 பாடங்கள் வைத்தனர். பின்னர் பழையபடி 6 பாடங்களாக மாற்றினர். 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அதிர்ச்சி கொடுத்தனர். எதிர்ப்புக்கு பின் அதை கைவிட்டனர். அரசு பள்ளிகளுக்கு ஆன்லைன் பாடத்திட்டம் என்றார் கல்வி அமைச்சர். பின்னர் ஆன்லைன் இல்லை, தொலைக்காட்சிகளில் வரும் என்றார். இப்படி நிலையான திட்டங்கள் இன்றி பள்ளி கல்வித்துறை தடுமாறி கொண்டிருக்கிறது.

Related Stories: