மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை மறுக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை: ராமதாஸ் அறிக்கை

சென்னை: மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை மறுக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதும், அதற்காக மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்; இது கண்டிக்கத்தக்கது.

மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சட்டத்தில்  எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அத்தகைய சூழலில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த முடியாது என்று கூறும் உரிமை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கிடையாது. நாடாளுமன்றத்தை விட மருத்துவ கவுன்சில் பெரிய அமைப்பு அல்ல. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்க்கான இடஒதுக்கீட்டை மறுப்பதற்காக மருத்துவக் கவுன்சில் விதிகளையும், பொருந்தாத நீதிமன்றத் தீர்ப்புகளையும் காரணம் காட்டும் மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான பொதுப்பிரிவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு (EWS) எந்த அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்குகிறது?

உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒரு நீதி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இன்னொரு நீதி என்பது சமூக நீதி அல்ல.... சமூக அநீதி.

எனவே, இனியும் தாமதிக்காமல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதன்மூலம் இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: