ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: கல்வி வாரியத்தை இணைப்பது நீதிமன்றத்தின் பணி கிடையாது என கருத்து

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்வியை வழங்க ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்கிற அமைப்பை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கறிஞரும்,பாஜக தலைவருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு  ஒன்றை தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் 6- 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பொது பாடத்திட்டங்கள் மற்றும் பாடங்கள் கொண்ட சீரான கல்வியை வழங்க வேண்டும்.

இதற்காக என்று  இந்திய இடைநிலை கல்வி வாரிய சான்றிதழ் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆகியவற்றை இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு என்று தேசிய அளவில் கல்வி கவுன்சில் என்கின்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.சமூக, பொருளாதார, சமத்துவம் மற்றும் நீதியை அடைவதற்கு தனியார் நிர்வகிக்கும் பள்ளிகள், மத்திய மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகள் என எதுவாக  இருந்தாலும் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் உருவாக்க மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார். இந்த மனுவானது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இது அரசின் கொள்கை சார்ந்த விசயங்கள், எனவே இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர். அதேபோல இரு கல்வி வாரியங்களை இணைக்க நீதிமன்றத்திடம் எப்படி நீங்கள் கோர முடியும் ? இது நீதிமன்றத்தின் பணி கிடையாது என நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொரிவித்தார். மேலும் ஏற்கனவே நமது பள்ளி மாணவர்கள் அதிகபடியான புத்தக சுமையை தோளில் சுமக்கின்றனர், அப்படி இருக்கையில் ஏன் கூடுதலாக புத்தக சுமையை அவர்கள் தோளில் வைக்கிறீர்கள். வேண்டுமெனில் இது தொடர்பாக அரசிடமும், உரிய அமைப்பிடம் மனு அளிக்கலாம், எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: