ராஜஸ்தானில் பரபரப்பு அரசியல் தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து பைலட் தரப்பு ஐகோர்ட்டில் மனு: சபாநாயகர் அதிகாரம் பற்றி கேள்வி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பரபரப்பான அரசியல் சூழலில், சபாநாயகர் விடுத்த தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களும் ஜெய்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்சி உத்தரவை மீறி 2 முறை எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது. அவர் உட்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய கட்சி கொறடா, சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி.ஜோஷிக்கு கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து, சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு இன்றைக்குள் பதிலளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சபாநாயகரின் நோட்டீசை ரத்து செய்யக் கோரி சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களும் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அப்போது சச்சின் பைலட் தரப்பில் வக்கீல் ஹரிஸ் சால்வே ஆஜராகி, ‘‘அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைக்கு மாறாக, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சட்டப்பேரவை நடக்கும்போது கட்சியில் இருந்து திடீரென விலகும் போதும், கட்சி கொறடா உத்தரவுக்கு மாறாக சட்டப்பேரவையில் வாக்களிக்கும் போதும் மட்டுமே 10வது அட்டவணைப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்,’’ என்றார். காங்கிரஸ் தரப்பில் முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சபாநாயகரின் நோட்டீஸ் அரசிலயமைப்புபடி செல்லுபடியாகுமா? என்பது குறித்து புதிய மனு தாக்கல் செய்ய பைலட் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கை தள்ளி வைத்தார். இந்த வழக்கால் மீண்டும் ஒருமுறை சபாநாயகர் அதிகாரத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி காங்கிரஸ் கட்சி கொறடா மணிஷ் ஜோஷியும் மனு செய்துள்ளார்.  சட்டப்பேரவை நடக்கும் போது கட்சியில் இருந்து திடீரென விலகும் போதும், கட்சி கொறடா உத்தரவுக்கு மாறாக சட்டப்பேரவையில் வாக்களிக்கும் போதும் மட்டுமே 10வது அட்டவணைப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்.

Related Stories: