மதுரையில் துவக்கம் மன்னார்குடிக்கு மாற்றம்: பழைய கட்சிக்கு பாலீஷ் போட்டு புதுக்கட்சி வேஷம்..! ‘சின்னம்மா… இப்படி பண்றீங்களேம்மா…’

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் சசிகலா. ஆட்சியிலும், அதிகாரத்திலும், கட்சியிலும் இவர் சொல்வது மட்டுமே நடந்தது. அந்தளவிற்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இன்றைய அதிமுகவில் உள்ள முக்கியமானவர்கள் பலர் இவரால் அரசியலில் அடையாளம் பெற்றவர்கள் தான். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு இவரை அதிமுகவினர் கண்டுகொள்ளவே இல்லை. அப்பாடா நிம்மதி என்ற மனநிலையில்தான் இருந்தனர். திரும்பி வந்த பின் எப்படியாவது அதிமுகவை பழைய பார்முக்கு வர வேண்டுமென விரும்பினார்.

எப்படியும் இணைப்பு சாத்தியமாகிவிடும் என செங்கோட்டையன், டிடிவி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் பேசியிருந்தார். ஆனால், செங்கோட்டையன் தவெகவிற்கு போக, டிடிவி.எல்லாவற்றையும் மறந்து எடப்பாடியுடன் கைகோர்க்க, ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியமானார். இதனால், தன் பின்னால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லாத நிலையில் எடப்பாடி மற்றும் டிடிவிக்கு எதிராக அரசியல் செய்யும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார் சசிகலா.
இதனால், கடந்த பிப். 14ம் தேதி கமுதி அருகே அரசியல் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் சசிகலா. தொடர்ந்து நேற்று முன்தினம் தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை சசிகலா அறிவித்தார்.

கட்சியின் பெயர், ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்றும், சின்னம் தென்னந்தோப்பு என்றும் அதிரடியாக அறிவித்தார். தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கவில்லை. சின்னம் ஒதுக்கியதாக எந்த தகவலும் இல்லை. ஆனால், திடீரென்று கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அறிவித்துள்ளாரே? இது எப்படி என்று பார்த்தால், இதன்பின்னால் கிட்டத்தட்ட 10 ஆண்டு கால அரசியல் பிளாஷ் பேக் இருக்கிறது.மதுரை, எஸ்எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர், தன் பெயரை எம்ஜிஆர் சிவா என்ற அடைமொழியுடன், தன்னையும் எம்ஜிஆரைப் போலவே மாற்றிக் கொண்டார்.

நடை, உடை, முக பாவனை, தலை முடி என எல்லாம் மாற்றிக் கொண்டவர், தொப்பியில்லாத எம்ஜிஆரை போல கருப்பு கண்ணாடியுடனே மதுரையில் வலம் வருவார். கையில் கடிகாரமும் இருக்கும். ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். தனது அரசியல் ஆர்வத்தால், மதுரை எஸ்.எஸ்.காலனியில் 2016-17 காலகட்டத்தில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும், அதன் நிறுவன தலைவராக தன் பெயரையும் பதிவு செய்து வைத்திருந்தார்.

இதற்கிடையில் பசும்பொன்னில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்த சசிகலாவிடம், புதிதாக அரசியல் கட்சியை பதிவு செய்தால் இடையூறு வரும் ஏற்கனவே பதிவு செய்த கட்சியாக இருந்தால் சரியாக இருக்கும் என்று சிலர் கூறியபோது ஆதரவாளரான மதுரை சுரேஷ் என்பவர், சக்கரவர்த்தி என்பவர் எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளார் என கூறியுள்ளார். இதையடுத்து அவரை அழைத்து பேசிய சசிகலா, அவரது கட்சியையும், அதற்காக ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னமான தென்னந்தோப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என பேசி முடித்து அறிவித்துள்ளார்.

இதில், கட்சி பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்திக் கொள்வது என்றும், கொடியை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்துதான், நடுவில் உள்ள நீல நிறம் மற்றும் எம்ஜிஆரின் படத்தை நீக்கிவிட்டு, அதிமுகவின் கொடியைப் போலவே கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த கட்சியின் நிறுவன தலைவராக சக்கரவர்த்தி பதிவு செய்துள்ள நிலையில், அவர் அந்த பதவியில் தொடருவாரா அல்லது சசிகலா பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளாரா? கட்சியின் தலைமை நிர்வாகிகள் யார் என்பதெல்லாம் சசிகலா வெளிப்படையாக அறிவிக்கும்போது தான் தெரியும். கட்சி உனது, கொடி எனது என்ற அக்ரிமெண்ட் அரசியல் மூலம் எடப்பாடிக்கும், டிடிவி.தினகரனுக்கும் எதிரான அரசியலை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

* கையில சிக்கின கெண்டையை விட்டுட்டு: விண்மீன பிடிக்க அலையும் தெர்மாகோல் சயின்டிஸ்ட்! மேற்கே, தெற்கே போனாலும் ‘டேக் டைவர்சன்’
மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் மேற்கு தொகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கிறார் செல்லூர் ராஜூ. இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா என தீவிர யோசனையில், கடந்த ஓராண்டாகவே இருக்கிறார். காரணம், மதுரை மேற்கு தொகுதியில் பலதரப்பட்ட மக்கள் திட்டங்களை நிறைவேற்றி, இம்முறை தொகுதியையே தன் அரவணைப்பில் அமைச்சர் பி.மூர்த்தி கொண்டு சென்று விட்டார். இதனால் தொகுதிக்குள் வெற்றி தொடர வாய்ப்பில்லை என்ற தீர்க்கமான முடிவிற்கு செல்லூர் ராஜூ சென்று விட்டார்.

கடந்த முறை வென்றவர்களுக்கே அந்த தொகுதியைத் தரலாம் என்று முடிவெடுத்த அதிமுக தலைமையிடமே, நகருக்குள் உள்ள 4 தொகுதிகளில் மதுரை மேற்கு தவிர்த்து மூன்றை குறிப்பாக மதுரை தெற்கு தொகுதியை ஒதுக்கித் தந்தால் நல்லதென்ற கருத்தை செல்லூர் ராஜூ முன் வைத்துள்ளார். அந்த தொகுதியைக் குறி வைத்தே தொடர் பிரசார பணிகளையும் வேகப்படுத்தினார். மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக தேஜ கூட்டணியினருடன் சேர்ந்து பிரமாண்ட ஆர்பாட்டத்தை முன்னின்று நடத்துமாறு செல்லூர் ராஜூவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவரோ சிட்டிங் தொகுதியான மதுரை மேற்கு தொகுதியில் பழங்காநத்தத்தை தவிர்த்து, மதுரையின் தெற்கு தொகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இப்படியே மெல்ல மெல்ல தெற்கு தொகுதிக்குள் ஐக்கியமானால், வரும் தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கை செல்லூர் ராஜூவிடம் பெருகி இருக்கிறது. இதற்காகவே எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதி நோட்டீசை முதன்முதலில் விநியோகிக்கும் நிகழ்ச்சியையும் இதே தெற்கு தொகுதியின் முனிச்சாலை சந்திப்பில்தான் செல்லூர் ராஜூ நடத்தினார். வாக்காளர்களுக்கான ஹாட் பாக்ஸ், டிபன் பாக்ஸ் விநியோகமும் இத்தொகுதியில்தான் நடக்கிறது.

ஆனால், தெற்கு எங்களுக்கு பேவரிட் ஆன தொகுதி. அதை விட்டுத் தர முடியாது என்கிறது பாஜ. இக்கட்சி சார்பில் ராம.சீனிவான், மகாலட்சுமி, முன்னாள் எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட பெரும் கூட்டம் வரிசையில் காத்திருக்கிறது. மதுரைக்குள் இந்த தொகுதியை விட்டால் வேறு நாதியில்லை என்ற நிலையில் பாஜவினர் சுற்றி வருகின்றனர். குறிப்பாக ராம.சீனிவாசன் இத்தொகுதிக்குள் பரிச்சயமானவர். மகாலட்சுமியும் சீட் கிடைக்குமென்ற நம்பிக்கையில், தொகுதியில் நலத்திட்ட உதவிகள் என விழாக்கள் நடத்தி வலம் வருகிறார். திடீரென செல்லூர் ராஜூவின் தெற்கு தொகுதி பாசம் இவர்களிடம் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறதாம்…

‘அவருக்குத்தான் மேற்கு தொகுதி குத்தகை விட்ட மாதிரி இருக்குல்ல… அப்புறம் ஏன் நமக்கு ஆதரவான தொகுதியை சுத்தி சுத்தி வராரு… ஒழுங்கா தொகுதியை சுற்றி வந்து ஓட்டுக் கேட்க சொல்லுங்க… கிராம வழக்குல சொல்ற மாதிரி, அகப்பட்ட அயிரையையும், கையில கிடைச்ச கெண்டையையும் விட்டுட்டு, எவனோ ஒருத்தன், விண்மீனை பிடிச்சு வறுத்து சாப்பிட ஆசைப்பட்டானாம் என்பது போல இருக்கு இந்த செல்லூர் ராஜூவோட நடவடிக்கை’’ என பாஜ தரப்பு, செல்லூர் ராஜூவை வறுத்தெடுத்து வருகிறதாம்…

* ‘விஜய் வந்தாலும் ஓட்டு போட மாட்டாங்க…’
செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டியில், ‘விஜய் வந்தாலும், மக்கள் கூட்டணியை வைத்து வாக்களிப்பதில்லை. ஆட்சியின் நன்மை, தீமைகளை ஆராய்வாங்க. (எதிரே இருந்த பெண்களைப் பார்த்து) ஏம்மா… அப்படித்தானேம்மா செய்வீங்க… ஆமா, இல்லைன்னு சொல்லுங்க… காதுல விழல. எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லல. நானே இருக்கேன்… உங்களுக்கு நல்லது செஞ்சாத்தான் எனக்கு ஓட்டுப் போடுவீங்க; இல்லைன்னா போயிட்டு வா செல்லூருக்கே கிளம்புன்னு சொல்லுவீங்க’ என்றார்.

Related Stories: