இப்ப வாய் பேச்சு… அப்பறம் அடி உதை…

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவு அருகே கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இதில், பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். கூட்டம் நடந்த போது மேடையில் ஏற இரண்டு கட்சி தொண்டர்கள் போட்டி போட்டனர். குறிப்பாக, மேடையில் நின்று செல்போனில் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், மேடையின் முன் ஒருவர் விழுந்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கேயிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். அதிமுகவுடன் அமமுகவினர், பாமகவினரும் பங்கேற்றனர். ஆனால் 4 கட்சிகள் இருந்தும் கூட்டணி கட்சியினர் பகையாளிகள் போல் முறைப்புடன் காணப்பட்டனர்.

கூட்டத்தை பாஜவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அவர்களை விட அதிமுகவினர் அதிகமாக வந்திருந்தனர். அதிமுகவினரை பாஜவினர் மதிக்காமல் மேடையில் தங்களது ஆட்களை உட்கார வைத்து கவுரவிக்க முயன்றனர். அதிமுக நிர்வாகிகள் சிலரை பாஜவினர் அவமதிக்கும் வகையில் பேசியதாக தெரிகிறது. கோபமடைந்த அவர்கள் யோவ், யாருய்யா நீங்க, உங்களுக்கு யாரை தெரியும், நாங்க யாருன்னு தெரியாம ஜனங்க கிட்ட செல்வாக்கு இருக்கிற மாதிரி பந்தா பண்றீங்களா, உங்களால மக்கள் கிட்ட போய் பேசி ஓட்டு வாங்க முடியுமா?, பூத் கமிட்டி இருக்காயா உங்களுக்கு என ஆவேசமாக கேட்டனர். நீயா, நானா மோதலால் அங்கே பரபரப்பு நிலவியது. இதை அண்ணாமலை, வேலுமணி கண்டுகொள்ளவில்லை. இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க, இன்னும் போக போக தான் இருக்கு, அடிச்சு உதைச்சுக்க போறாங்க என அங்கேயிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.

* சினிமாவில் செந்தில் போல் காமெடி பண்ணும் விஜய்: சாட்டை சுளீர்
நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகம் கூட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடந்தது. இதில் ஆவடி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புனிதா சண்முகத்தை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா உள்ளிட்டோர் அறிமுகம் செய்து வைத்தனர். கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், ‘‘பாஜவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேசுவதற்கு அதிமுகவிற்கு தகுதி இல்லை. தவெக தலைவர் விஜய் திரைப்படத்தில் நடிகர் செந்தில் மலையை தூக்கி தலையில் வைத்தால் தூக்குகிறேன் என்பது போல, ஓட்டு போடுங்கள், நான் முதலமைச்சராகி கிராமம் கிராமமாக வருகிறேன் என்று காமெடி செய்கிறார். இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாநில அரசு பெயர் சூட்ட முடியாது என்பது தெரியாமல் அஞ்சலை அம்மாள் நீதிமன்றம் திறப்போம் என விஜய் கூறுகிறார்’ என்றார்.

Related Stories: