சென்னை: சென்னையில் பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மேலிட பார்வையாளர் அர்ஜூன்ராம் மேக்வால், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணை தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: விஜய்யை பாஜ சிபிஐ விசாரணைக்கு என்று அழைத்து மிரட்டி கூட்டணிக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன. உங்களுக்கு இருக்கிற ஒரே கவலை கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பதுதான். விஜய் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. விஜய் டெல்லிக்கு செல்வது எதற்காக என்று உங்களுக்கு தெரியும். டெல்லி போகிறது இது முதல் முறை கிடையாது. கரூரில் நடந்த சம்பவத்துக்காக அவர் விசாரணைக்காக டெல்லி செல்கிறார்.
அதையும் இதையும் இணைத்து பேசுவது எந்த வகையிலும் சரியாக இருக்காது. உலகம் முழுவதும் போர் நடக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் எந்த போரும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரே அக்கப் போராக இருக்கிறது. போர் நடைபெறும் காலங்களில் என்னவெல்லாம் நடைபெறும் என்று உங்களுக்கு தெரியும். இதுகுறித்து பிரதமர் மோடி கூட்டம் போட்டு பேசியுள்ளார். எல்லோருக்கும் முறையாக கொடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. உலகத்தில் போர் நடைபெறும் சூழ்நிலையில் இதை எல்லாம் பெரிதுபடுத்தினால் எப்படி நியாயமாக இருக்க முடியும். தமிழகத்தில் எல்லா பெட்ரோல் பங்க்கிலும் கூட்டமாக இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
