மும்பையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு பணியாக கேரளாவில் இருந்து மருத்துவர்கள் நியமனம்: ஊதியம் கிடைக்காததால் சொந்த ஊருக்கு திரும்பும் அவலம்..!!

மும்பை: மும்பை பிஎம்சி தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு பணியாக கேரளாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி கேரளா திரும்ப தொடங்கியுள்ளனர். இதுவரை 15 மருத்துவர்கள் கேரளா திரும்பியுள்ள நிலையில் இன்று மேலும் 25 மருத்துவர்கள் ஊர் திரும்ப உள்ளனர்.

இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதுபோல மும்பை மாநகராட்சியில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள காரணத்தால், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க கேரளாவிலிருந்து 40 மருத்துவர்கள் மற்றும் 35 செவிலியர்கள் கொண்ட சிறப்பு குழு ஜூன் 9-ஆம் தேதி மும்பை சென்றடைந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இவர்களில் சிறப்பு மருத்துவர்களின் ஊதியம் 2 இலட்சமாகவும், மருத்துவர்களின் ஊதியம் 80 ஆயிரம் என்றும், செவிலியர்கள் ஊதியம் 35 ஆயிரம் என்றும், இவர்களின் போக்குவரத்து செலவும் பிஎம்சியை சேர்ந்தது எனவும் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் கடந்த மாதம் மருத்துவர்கள் பணியாற்றியுள்ள நிலையில் இந்த மாதம் ஜூலை 5-ஆம் தேதி, ஜூலை 10, ஜீலை 13 என்று பலமுறை காலக்கெடு சொல்லியும் இதுவரை தங்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர் இம்மருத்துவர்கள். இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள பிஎம்சி  இது தொடர்பான கோப்புகள் அனுப்பட்டுள்ளது, விரைவில் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: