திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!: மின்கட்டண உயர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்!!!

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டமானது நடைபெறவுள்ளது. கட்சி தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தவாறே காணொளி மூலம் காலை 10 மணிக்கு இந்த கூட்டத்தை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருமே காணொளி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய கருத்தாக மின் கட்டண உயர்வு குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. ஏனெனில், மின் கட்டண உயர்வு என்பது மக்களால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு ஒரு சிரமத்தினை ஏற்படுத்தி வருவதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து, பலமுறை அறிக்கையும் விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசே இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதில் ஒரு தீர்மானத்தை இயற்றி, அரசுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துவது குறித்து கூட்டத்தில் முடிவெடிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக கடந்த மே 7ம் தேதி கருப்பு சின்னம் அணிந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோலவே இந்த முறையும் சமூக இடைவெளியை பின்பற்றி அவரவர் அவர்களது இல்லத்தில் இருந்தவாறே மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தை நடத்துவதற்கான முறையை நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமாக இருந்த ஜெ. அன்பழகன் மறைவிற்கு பிறகு காலியாக இருக்கக்கூடிய அந்த மாவட்ட செயலாளர் பதவிக்கான இடத்தை யார் மூலம் நிரப்புவது, யாரை குறிப்பிட்டு நியமிப்பது என்றும் நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

Related Stories: