ரஜினி பற்றி பேசிய விவகாரத்தில் பாஜ மிரட்டலால் பொது மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஆதவ்

 

பெரம்பூர்: ரஜினி பற்றி பேசிய விவகாரத்தில் பாஜக மிரட்டல் விடுத்ததால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூன் பொது மேடையில் பகீரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். எப்பொழுதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டும், தன்னை பற்றி மற்றவர்கள் பேசவேண்டும் என்று நினைக்கும் நபர்களில் தவெகவின் ஆதவ் அர்ஜுனாவும் ஒருவர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தபோது தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள பேசிய பேச்சுக்கள் அனைத்தும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி அந்த அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், ரஜினி குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்தநிலையில் எப்படியாவது அதிமுக உதவியுடன் தமிழகத்தில் கால் பதித்திடவேண்டும் என்ற நினைப்பில் உள்ள பாஜ தீவிரமாக தமிழக அரசியலை உற்றுநோக்கி வருகிறது. அந்த வகையில் ரஜினி விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனாவை பாஜக மிரட்டியுள்ளது. சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதியில் தவெக சார்பில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி சார்பில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ஜே.சி.டி.பிரபாகரன், வி.எஸ்.பாபு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் பேசினர். இதில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: 2026ல் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பார். தமிழகம் மட்டுமின்றி ஐந்து மாநிலத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

அன்று சி.பி.ஐ. விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்ததும் தேர்தல் பிரசாரத்தை டெல்லியிலேயே ஆரம்பித்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், இனி நாம் எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம். முதல் கூட்டமே முதல்வரான ஸ்டாலின் தொகுதியில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து கொளத்துாரில் நடத்தப்பட்டுள்ளது. எங்களைப்பற்றி எந்த அவதூறு வேண்டுமானாலும் பரப்புங்கள். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. ரஜினி நம் அன்புக்குரியவர். அவரது மன்றத்தில் இருந்து வந்தவருக்கு நமது மேடை அளித்துபொறுப்பும் வழங்கியவர் நம் தலைவர். அதை மடைமாற்றும் வேலையைதான் சமீபத்தில் செய்தனர்.

சட்டம், ஒழுங்கு சரியில்லை எனக்கூறி த.வெ.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் பேசும்போது தூத்துக்குடி மரணம் கொடூரமானது என்பதை சுட்டிக்காட்டி பேசினேன். நான் அன்று பேசியது கோபத்தின் வெளிப்பாடு. ரஜினி சார் அவர்களே, உங்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. நான் சாமானியன். விவசாயி வீட்டில் பிறந்தவன். எல்லா தொழிலையும் தூக்கிப்போட்டுவிட்டு வந்துள்ளேன். நாங்கள் உறுதியாக சாதிப்போம். எம்ஜிஆரின் உறுதி, விஜய்யிடம் உள்ளது. 234 தொகுதியிலும் தனியாக போட்டியிடுகிறோம். நமக்கு முதல்வர், துணை முதல்வர், 50 தொகுதிகள் என பல்வேறு சலுகைகளை வழங்கினர். ஆனால் விஜய் அதை புறம்தள்ளி விட்டு, தமிழக மக்களுக்காக தனியே வந்துள்ளார்.

முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் தலைவர் விஜய் அல்ல. ஜனநாயகன் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல்தான் காரணம். கீழ்தரமான பிரசாரத்தை செய்து ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்தனர். அதைத்தான் நான் சொன்னேன். ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னதும் அவருக்கு 18 சதவீதம் ஆதரவு உருவானது. அதிமுகவினரும் ரஜினிக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் இருக்க பலவாறு பிரசாரத்தை செய்தனர். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது கடுமையாக எதிர்த்தவர் பழனிசாமி.

தற்போது ரஜினி ஒரு பதிவிட்டார். எங்களுடைய தலைவருக்கும் நீங்கள் தலைவர், எங்கள் தலைவரின் நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடு. நான் பேசியதால் நீங்கள் வருத்தப்பட்டிருந்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். ரஜினி அரசியலில் இல்லை. நாம் அவருடன் போட்டிப்போட வேண்டிய அவசியம் இல்லை. நம் பிரசாரம் திசை திரும்ப கூடாது. முதல்வர் பதவியே தந்தாலும் யாருடனும் கூட்டணி இல்லை. தமிழக மக்களுடன் தான் கூட்டணி. நம் குறிக்கோள் திமுகவின் சூழ்ச்சியை முறியடிக்க வரும் 30 நாள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு ஆதவ் பேசினார்.

Related Stories: