”பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள்” ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வில்லிவாக்கத்தில் போஸ்டர்கள்: பரபரப்பு

 

அண்ணாநகர்: வில்லிவாக்கம் தொகுதி மக்களே எச்சரிக்கை, ஆதவ் அர்ஜுனாவின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் வில்லிவாக்கம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தலுக்கான களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. எந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள்? யாருடன் கூட்டணி என்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில், ஆதவ் அர்ஜுனா போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு எதிரான சுவரொட்டி விளம்பரங்கள் வில்லிவாக்கம் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழகம் சென்னை மாவட்டம் என்ற பெயரில் வில்லிவாக்கம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போஸ்டர்கள் நேற்று நள்ளிரவு ஒட்டப்பட்டுள்ளது. இதனால் தவெகவினர் அதிருப்தியடைந்துள்ளனர். இன்று காலையில் இருந்து பொதுமக்கள் இடையே பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து வில்லிவாக்கத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் தொடர்பாக தவெகவினர் புகார் தெரிவித்ததும், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பெரும்பான்மையான போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.

இதில், சில போஸ்டர்கள் இன்னும் கிழிக்கப் படாமல் உள்ளது. ஒட்டப்பட்ட போஸ்டரில் ”யார் வில்லிவாக்கத்தின் வில்லன்” வடகிழக்கு மாநில மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொழுத்த கள்ள லாட்டரி மாபியா ஆதவ். இப்போது வில்லிவாக்கம் தொகுதி மக்களின் உயிரை உறிஞ்ச வருகிறான், இதுபோன்ற அரசியலற்ற சுயநல அயோக்கியர்களுக்கு பாடம் புகட்டுவோம், ஏழை மக்களின் வயிற்றில் அடித்து உல்லாச வாழ்க்கை நடத்தும் டிப்டாப் ஆசாமியை தொகுதியில் இருந்து அடித்துவிரட்டுவோம். ”வில்லிவாக்கம் தொகுதி மக்களே எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை. இவனின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள்” இப்படிக்கு, தந்தை பெரியார் திராவிட கழகம், சென்னை மாவட்டம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Stories: