மர்மங்கள் நிறைந்த பத்மநாபசுவாமி கோயில் ‘பி’ அறை திறக்கப்படுமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பால் புதிய எதிர்பார்ப்பு

திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்ற  தீர்ப்பை அடுத்து திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் ‘பி’ ரகசிய அறை திறக்கப்படுமா என்ற புதிய ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற   பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மன்னர் குடும்பத்துக்ேக சொந்தம் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. மேலும், இதை கண்காணிக்க திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட நிர்வாகக்குழு அமைக்கவும்  உத்தரவிட்டுள்ளது.

இந்த கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக சர்ச்சை கிளம்பியதால், இவற்றை திறந்து பரிசோதிக்க கடந்த 2011ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ‘பி’ அறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து என மன்னர் குடும்பம் தெரிவித்ததால், ‘பி’  அறையை தவிர மற்ற அறைகளை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறைகளில் பொக்கிஷங்கள் குவிந்து கிடந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இதைவிட பலமடங்கு பொக்கிஷங்கள் ‘பி’ அறையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

‘பி’ அறை பல நூற்றாண்டுகளாக திறக்கப்படவில்லை என  மன்னர் குடும்பத்தினர் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்த அறை இதற்கு முன்பு  2 முறை திறக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு வக்கீல் கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். இதையடுத்து, ‘பி’ அறையை  திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ‘பத்மநாப சுவாமியின் மூல விக்ரகம் அமைந்துள்ள  கருவறையின் நேர் கீழேதான் இந்த ‘பி’ அறை இருக்கிறது. அதை திறந்தால் மூல  விக்ரகத்துக்கு சேதம் ஏற்படும்,’ என மன்னர் குடும்பம் தெரிவித்தது.   

இதனால், ‘பி’ அறையை  திறக்கும் முடிவை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது. ஆனால், நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் ‘பி’ அறையை திறப்பது குறித்து தற்போது  அமைக்கப்பட உள்ள மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழு தீர்மானிக்கலாம் என  தெரிவித்துள்ளது. இதனால், ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ள ‘பி’ அறை  திறக்கப்படுமா என்ற ஆவல் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், கோயிலின்  நிர்வாக பொறுப்பு மன்னர் குடும்பத்துக்கே திரும்ப கிடைத்துள்ளதால்,  அவர்களின் எதிர்ப்பை மீறி ‘பி’ அறையை திறக்க  முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

* 2 வது உள்அறைதான் மிக முக்கியமானது

சர்ச்சைக்குரிய ‘பி’ அறைக்குள் 2 உள்அறைகள் உள்ளன. இவற்றுக்கு கருங்கல்லால் ஆன  கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், முதல் அறை மட்டுமே முன்னர் திறக்கப்பட்டது எனவும், அதற்கு பின்னால் உள்ள 2வது அறைதான் மிகவும்  முக்கியமானது எனவும் மன்னர் குடும்பத்தினர் கூறி வருகின்றனர். ‘இதை சக்தி வாய்ந்த இயந்திரங்களை பயன்படுத்திதான் திறக்க முடியும். அப்படி செய்தால், கோயிலுக்கும் பலத்த சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது,’  என மன்னர் குடும்பம் கூறி வருகிறது.

Related Stories: