கேரளாவை கலக்கும் ரூ.13 கோடி தங்கம் கடத்தலில் தொடர்பு 10ம் வகுப்பு தேறாத சொப்னா அரசு அதிகாரியானது எப்படி? சென்னையில் பதுங்கலா? பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: கேரளாவை கலக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சொப்னா 10ம் வகுப்பு கூட தேறாத சொப்னா ஐடி துறையில் முக்கிய பதவி பெற்றது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக  தூதரகத்துக்கு வந்த பார்சலில் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் கடந்த 3 நாட்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக  பணிபுரிந்த சரித்குமார் கைதானார். விசாரணையில், தூதரக நிர்வாக செயலாளராக பணியாற்றிய சொப்னா சுரேஷுக்கு கடத்தலில் பங்கு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். சொப்னா சுரேஷ் 4 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தில் நிர்வாக செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நான்கு ஆண்டுகளில் இவர் கேரள அரசின் முக்கிய அதிகாரிகளுடனும் அரசியல் பிரமுகர்களுடனும் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இதுபோல் தூதரகத்திலும் சர்வ வல்லமை படைத்தவராக வலம் வந்தார். இதை பயன்படுத்தி தான் தங்கம் கடத்தலில் இவர் ஈடுபட்டுள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்த இவர் இரண்டாவது ஒருவரை திருமணம் செய்தார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். முதல்வர் நடத்தும் அரசு கூட்டங்களில் கூட தூதரக உயர் அதிகாரிபோல் இவரும் பங்கேற்று வந்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்னர் தான் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தூதரகத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த தகவல் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டு மோசடியை தொடர்ந்த இவர் உயர் மட்ட தொடர்பு மூலம் கேரள அரசு துறையில் முக்கிய பதவியை பிடித்துள்ளார். இந்த நிலையில், சொப்னா 10ம் வகுப்பு கூட தேறவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அவரது அண்ணன் பிரைட் சுரேஷ் தெரிவித்துள்ளார். சொப்னா சுரேஷ் கடைசியாக கேரள அரசு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடத்திவரும் தகவல் தொழில்நுட்பத்துறை விண்வெளி பூங்கா திட்ட பணியில் பணிபுரிந்தார். பலமுறை முறைகேடுகளில் ஈடுபட்டவர், 10 ம் வகுப்பு கூட பாசாகாதவருக்கு இந்த வேலை வாங்கி கொடுத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் என்பவருடன் இணைந்து ‘கார்பன் டாக்டர்’ என்ற பெயரில் கார் ஒக்‌ஷாப்பை நடத்தி வருகிறார். இந்த சந்தீப்நாயருக்கும் தங்கம்  கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் அவரும் தலைம றைவாகியுள்ளார். அவரது மனைவி சவுமியாவை கஸ்டடியில் எடுத்து கொச்சி கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தீப் நாயரும் சொப்னாவும் ஒன்றாக தலைமறைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தலைமறைவான சொப்னா சுரேஷ் செல்போனில் சென்னையில் உள்ள ஒருவரிடம் பேசியதை சுங்க இலாகாவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவர் சென்னைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரை கைது  செய்ய சென்னை போலீஸ்  உதவியை நாடவும் சுங்க  இலாகாவினர் முடிவு செய்துள்ளனர்.

* வைரலாகும் வீடியோ

சந்தீப் நாயரும் சொப்னா சுரேஷூம் சேர்ந்து தொடங்கிய கார் ஒர்க்‌ஷாப்பை கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தான் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுடன் ெசாப்னா சுரேஷ் மிக நெருக்கமாக நின்று பேசுவதும் அவர் இவரை தட்டிக்கொடுப்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பல நிகழ்ச்சிகளில் சொப்னா சுரேஷும் சபாநாயகரும் ஒன்றாக பங்கேற்றனர் என்பது குறிப்பித்தக்கது.

* அண்ணனுக்கு கொலை மிரட்டல்

சொப்னா சுரேஷின் அண்ணன் பிரைட் சுரேஷ் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் ஒரு மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எனது தந்தை அபுதாபி மன்னர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். நான், சொப்னா மற்றும் என் தம்பி அபுதாபியில் தான் பிறந்து வளர்ந்தோம். பின்னர் நான் அமெரிக்காவில் குடியேறினேன். என் பெற்றோரும் சொப்னாவும் திருவனந்தபுரம் அருகே சொந்த ஊரான பாலராமபுரம் சென்றனர். அம்மாவின் வற்புறுத்தலால் 22 ஆண்டுகளுக்கு பின்னர் தந்தையை பார்க்க கேரளா சென்றேன். சொத்தை எழுதி வாங்க வந்திருப்பதாக சொப்னா கருதி, உடனடியாக அமெரிக்கா திரும்பி செல். இல்லை என்றால் கை கால் இருக்காது என்று என்னை மிரட்டினார். அவருக்கு பல பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பது தெரியும் என்பதால் நான் அமெரிக்கா திரும்பினேன் என்று கூறியுள்ளார்.

* சிபிஐ விசாரணை துவக்கம்

இது இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம் என்பதால் மத்திய அரசு, கேரள  அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. நேற்று கொச்சியில் உள்ள சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த தங்கம் கடத்தல் சம்பவத்தில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கோ வேறு மத்திய அரசு அலுவலர்களுக்கோ தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விவகாரம் என்பதால், மத்திய உளவு அமைப்புகளான ஐபி, ரா மற்றும் பொருளாதார குற்றம் நடந்துள்ளதால் அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறையும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

* முதன்மை செயலாளர் ஒரு ஆண்டு விடுப்பு

சொப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் முதல்வரின் முதன்மை செயலாளர் சிவசங்கர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கர் முதல்வர் பினராய் விஜயனுக்கு மிகவும் நெருக்கமானவர்.மேலும் அவரை ஓராண்டு விடுப்பில் செல்லும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: