ஜோலார்பேட்டையில் வெறிச்சோடிய ரயில் நிலையம்: கொரோனாவால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ரயில் நிலைய வியாபாரிகள்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் ரயிலில் வியாபாரம் செய்து வரும் 200க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தமிழகத்தில் மிகப்பெரிய ரயில் நிலையமாக சென்னை ரயில் நிலையம் உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் 2வது மிகப்பெரிய ரயில் நிலையமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து  பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அன்றாடம் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இதனால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ரயில் பயணிகள் நடமாட்டம் இருந்து வந்தது.

மேலும் வட மாநிலத்திலிருந்து தென் மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வருவதால் வட மாநிலத்தவரின் போக்குவரத்தும் இங்கு அதிகரித்து வருகிறது. இதனால் அன்றாடம் இயக்கப்படும் 100க்கும் மேற்பட்ட ரயில்களில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு அவ்வப்போது டீ , காப்பி, சாப்பாடு, டிபன், தண்ணீர் போன்றவைகளை வியாபாரம் செய்து இதன் மூலம் நாள்தோறும் தங்கள் வருவாயைப் பெருக்கி வந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் தங்குதடையின்றி இருந்து வந்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ரயில் சேவை அனைத்தும் நிறுத்தப்பட்டதால் ரயில்களிலும், பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் தற்போது அவர்களுடைய வருவாயை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் தற்போது 24 மணி நேரமும் பரபரப்பாகவும் பயணிகளின் கூட்டமும் இருந்து வந்த நிலை தற்போது ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை ரயில் நிலையம் பொதுமக்கள் இன்றி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. பிளாட்பாரங்களில் செடிகள் முளைத்து காட்சி அளித்து வருகிறது. தற்போது பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் மட்டும் சென்று வருவதால் மற்ற நேரங்களில் ரயில் போக்குவரத்து இல்லாமல் ரயில் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் ரயில்களில் வியாபாரம் செய்து வந்த தொழிலாளர்கள் இந்த வேலையை தவிர்த்து வேறு வேலை தெரியாததால் மாற்று வேலைக்கு சொல்ல முடியாமல் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே கொரோனா தொற்று முடிவடைந்து மத்திய மாநில அரசுகள் மீண்டும் ரயில் சேவைகளை துவங்கினால் மட்டுமே இவர்களின் வாழ்வாதாரம் பெருக வழிவகுக்க முடியும் என ரயில்களிலும், பிளாட்பாரங்களிலும்  வியாபாரம் செய்து வரும் தொழிலாளர்கள் தங்களுக்கு தாங்களே மனதை தேற்றி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு அரசு மூலமும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமும் உதவிகள் வழங்கினால் பேருதவியாக இருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

Related Stories: