கொரோனா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா?: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மேற்கு மாவட்டங்களின் வழியாக  உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள தேவனகொந்தி வரை அமைக்கப்படும் எண்ணெய்க் குழாய் பாதையை சாகுபடி நிலங்களை பாதிக்காமல் மாற்றுவழியில் அமைக்க வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணுகியுள்ளனர். முதலமைச்சர் வழிகாட்டல்படி, மாநில தொழில்துறை அமைச்சரைச் சந்தித்த கூட்டமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகளுக்கும், சாகுபடி நிலங்களுக்கும் ஏற்படும் பேரழிவுகளை எடுத்துக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவியோடு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் கவனத்திற்கு பிரச்சினையின் தீவிரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இருகூர் - தேவனகொந்தி குழாய் பதிப்பு திட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு நிலம் எடுப்பு தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு அறிக்கை கொடுத்து வருகின்றனர்.பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், கொரானா நோய் பரவல் அதிகரித்து வரும் ஆபாத்தான நிலையில் விவசாயிகளை விசாரணைக்கு அழைத்திருப்பது வஞ்சகத் திட்டமாகும். மேற்கு மாவட்டங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து விவசாயிகள் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் அரசு பேசித் தீர்வு காணும் வரையில் எண்ணெய்க் குழாய் பதிப்பு திட்ட அதிகாரிகளின் விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தலையிட்டு  நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: