இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்ரியல்

ஜமைக்கா: இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷேனான் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், முதல் தொடராக இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏற்கனவே சவுத்தாம்ப்டன் சென்று 2 வார தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்ட பின்னர், தீவிரமாகப் பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்த வேகப் பந்துவீச்சாளர் ஷேனான் கேப்ரியல் (32 வயது) உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து 15 வீரர்கள் அடங்கிய இறுதி அணியில் இடம் பிடித்துள்ளார். 2012 மே மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கேப்ரியல் இதுவரை 45 டெஸ்டில் 133 விக்கெட் (சிறப்பு 8/62) வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், க்ருமாஹ் பானர், கிரெய்க் பிராத்வெய்ட், ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பெல், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், ஷேனான் கேப்ரியல், கெமார் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், ரேமன் ரீபர், கெமார் ரோச்.

Related Stories: