கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் 2வது தடுப்பூசி கண்டுபிடிப்பு : மனிதர்கள் மீது பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி!!

அகமதாபாத் : கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 2வது ஆக மேலும் ஒரு தடுப்பூசி தயாராகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டன. அதில் ரஷ்ய நிறுவனம், சீனா நிறுவனம், அமெரிக்க நிறுவனம் போன்றவை விலங்குகளிடம் அதனைப் பரிசோதனை நடத்திவிட்டு மனிதர்களுக்குப் பரிசோதனை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனமும் இறங்கியுள்ளது.

அகமதாபாத் நகரைச் சேர்ந்த சைடஸ் கெடில்லா என்ற நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய அந்த நிறுவனம், ஏப்ரல் மாத இறுதியில் ஆய்வக சோதனையில் முதற்கட்ட வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சைடஸ் கெடில்லா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது 2 நிலைகளில் சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 30 நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் 17 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மனிதர்கள் மீதான பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: