கொரோனா பரவாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைக்க போலீசார் ஒத்திகை: மாமல்லபுரம் போலீசார் புதிய முயற்சி

மாமல்லபுரம்: குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடித்து கொரோனா பரவாமல் தடுக்க, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது குறித்த ஒத்திகை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், போலீசார் நடத்தினர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், பல இடங்களில் திருட்டு, கொலை, வழிப்பறி உள்பட பல குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுதொடர்பாக கைது செய்யப்படும் குற்றவாளிகளை, சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது குறித்து,  மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில்,  பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

அதில், ஒரு குற்றவாளியை போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து, அவரை திருமண மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து, பாதுகாப்பு முக கவசம் வழங்கி, சமூக இடைவெளியுடன் போலீசார் விசாரிக்கின்றனர். பின்னர், அவரை அழைத்து சென்று மருத்துவரிடம் பரிசோதித்து, அறிக்கை பெற்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது போன்று ஒத்திகை நடத்தினர். முன்னதாக குற்றவாளியை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது, அவர்களுக்கு கையுறை முக கவசம் அணிந்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

அங்கிருந்து வரும் போலீஸ் வாகனத்துக்கு 2 முறை கிருமிநாசினி அடிப்பது, குற்றவாளிகள் பிடிக்கும்போது போலீசார் கையுறை, முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என ஒத்திகையில் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக குற்றவாளிகளுக்கு கொரோனா தொற்று இருந்தால், அவரை  எப்படி அழைத்து சென்று சிறையில் அடைப்பது, உடன் செல்லும் போலீசாருக்கு எப்படி தொற்று பரவாமல், பாதுகாப்பு விதிமுறைகளை கையாள்வது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் விளக்கினார். சில காவல் நிலையங்களில், முக்கிய வழக்குகளில் கைது செய்யும் குற்றவாளிகளை இரவு நேரங்களில், லாக்கப்பில் வைக்காமல் திருமண மண்டபங்களில் தங்க வைத்து, அந்த இடம் முழுவதும் கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்ய வேண்டும் என போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: