கொரோனாவுக்கு சீல் வைக்கப்பட்ட வீட்டை உடைத்து 10 சவரன், பைக் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

செங்கல்பட்டு: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சீல் வைக்கப்பட்ட வீட்டை உடைத்து 10 சவரன் நகை, பைக் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.செங்கல்பட்டு அடுத்த கோகுலாபுரத்தில் வசிக்கும் 45 வயதுள்ள ரியல் எஸ்டேட் அதிபர், அவரது மனைவி, 2 பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அதில், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டை சீல் வைத்ததை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அங்கு வந்த மர்மநபர்கள், வீட்டை உடைத்து 10 சவரன் நகை, பைக் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: