உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு; வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தோல்வியடைந்ததாக அறிவிப்பு: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்

கடலூர்: தமிழகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இதில் கீரப்பாளையம் ஒன்றியத்தில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான முன்னாள் சேர்மனுமான அமுதராணி போட்டியிட்டார். இதில், அமமுக சார்பில் போட்டியிட்ட கவிதா என்பவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதில் தில்லுமுல்லு நடந்ததாக அதிகாரி ஜெயக்குமாரிடம் திமுகவினர் முறையிட்டனர்.

இந்நிலையில் சக வேட்பாளரான காஞ்சனா சந்தோஷ்குமார் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தலில் வெற்றி, தோல்வி வாக்கு விவரங்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். திமுக வேட்பாளர் அமுதராணி பெற்ற வாக்குகள் 1172. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கவிதா 1066 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்று தகவல் பெறும் உரிமை மூலம் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து அமுதராணி கூறுகையில், நான் பதவிக்கு வரக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியால் என்னை விட 106 வாக்குகள் குறைவாக பெற்ற கவிதாவை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என்பது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் ஆதாரம் வெளிவந்துள்ளது.

எனவே தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலாளர் சுப்ரமணியன் தேர்தலில் நடந்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி உண்மையான வெற்றி வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும். அதே சமயத்தில் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரிகள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: